தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தவெக (தமிழக வெற்றி கழகம்) உடன் கூட்டணி அமைப்பது குறித்து சஸ்பென்ஸ் பதில் அளித்துள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், அது நல்லதாகவே நடக்கும்” என்று விஜய் உடனான கூட்டணி குறித்து பதில் அளித்து, பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார். இந்த ஒரு வார்த்தை தமிழக அரசியலில் கூட்டணி குறித்து பல யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பேசிய அவர், அதிமுகவில் பிளவுபட்ட தலைவர்கள் விரைவில் ஒன்று சேர்வார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். “அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் ஒரு நல்ல செய்தியைச் சொல்வார்” என்றும், “சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரையும் உரிய நேரத்தில் சந்திப்பேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் தீவிரமடைந்ததை அடுத்து, செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் மாற்றங்களுக்கு மத்தியில், ஓபிஎஸ்-ன் பேச்சு தமிழக அரசியலில் புதிய கூட்டணி விவாதங்களை உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறிய தமிழகம் முழுவதும் அரசியல் ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.