இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கு இடையேயான எல்லைக் கடக்கும் பாலமான கிங் ஹுசைன் பாலத்தில் (King Hussein Bridge) நடந்த தாக்குதலில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
அல் ஜசீரா உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, ஜோர்டானிலிருந்து மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றி வந்த லாரி ஒன்றின் ஓட்டுநர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 20 வயது மற்றும் 60 வயது மதிக்கத்தக்க இரண்டு இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் உடனடியாக பதிலடி கொடுத்து தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேலிய ராணுவம் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த எல்லைப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலும் இதே இடத்தில் ஒரு தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல், ஏற்கனவே பதட்டமான மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் ஒரு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.