அல் பாஷர் நகரில் தொடரும் பயங்கரம்!
வட டார்ஃபுர் மாகாணத்தின் தலைநகரான அல் பாஷர் நகரில், மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தொழுகை செய்து கொண்டிருந்த பொது மக்கள் மீது சூடான் துணை இராணுவக் குழு நடத்திய தாக்குதலில் 43 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
சூடான் மருத்துவர்கள் வலையமைப்பு என்ற அமைப்பு ‘X’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட தகவலில், ராபிட் சப்போர்ட் ஃபோர்சஸ் (RSF) என்ற குழு நடத்திய ட்ரோன் தாக்குதலில் குழந்தைகள் மற்றும் வயோதிகர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. இது ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட “கொடூரமான குற்றம்” என்றும், இது மனிதாபிமான மற்றும் மத நம்பிக்கைகள், சர்வதேச சட்டங்கள் ஆகியவற்றை இக்குழு முற்றிலும் மதிக்கவில்லை என்பதைக் காட்டுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மசூதி இடிபாடுகளுக்குள் சிதைந்த உடல்கள்!
மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழுவான ‘அல் பாஷர் ரெசிஸ்டன்ஸ் கமிட்டி’, சமூக வலைத்தளத்தில் ஒரு காணொளியை வெளியிட்டது. அதில், மசூதியின் சில பகுதிகள் சிதிலமடைந்துள்ளதாகவும், சிதறிய உடல்கள் இடிபாடுகளுக்குள் கிடப்பதும் காண்பிக்கப்பட்டது. ஆனால், இந்த காணொளியின் உண்மைத் தன்மையை ஏ.பி. செய்தி நிறுவனம் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.
தாக்குதல் நடந்த மசூதியின் சரியான இடம் குறித்த விவரங்கள் பகிரப்படவில்லை. இருப்பினும், கடந்த ஒரு வாரமாக அல் பாஷர் நகரில் RSF மற்றும் இராணுவத்திற்கு இடையே கடும் மோதல்கள் நடந்து வருவதன் ஒரு தொடர்ச்சியாகவே இந்த ட்ரோன் தாக்குதல் பார்க்கப்படுகிறது.
அழிவுப் பாதைக்குத் தள்ளப்பட்ட சூடான்!
சூடானில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய உள்நாட்டுப் போர், உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி இதுவரை 40,000 பேருக்கும் அதிகமானோரின் உயிரைப் பறித்துள்ளது. மேலும், 1.2 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். பலர் பஞ்சம் மற்றும் பட்டினியின் விளிம்பில் உள்ளனர். அல் பாஷர் நகர், ஒரு வருடத்திற்கும் மேலாக இருதரப்பு மோதல்களின் மையப்புள்ளியாக உள்ளது. டார்ஃபூர் பிராந்தியத்தில் இராணுவத்தின் கடைசி கோட்டையாகவும் இது கருதப்படுகிறது.
வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலுக்கு முந்தைய நாட்களில், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையும் இடப்பெயர்வு முகாம்களையும் RSF படைகள் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.