2028 ஆம் ஆண்டுக்கு வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில், ஏற்றுமதித் துறையில் இலங்கை எதிர்நோக்கும் சிக்கல்கள் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவர் கலாவெவ பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இதனை எடுத்துரைத்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கைகள் இலங்கையின் ஏற்றுமதிக்குக் கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளன. பிற நாடுகள் அமெரிக்காவுடன் இணக்கப்பாடுகளை எட்டியுள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசாங்கம், முன்னைய அரசாங்கம் மேற்கொண்ட சர்வதேச நாணய நிதிய உடன்பாட்டைத் திருத்தாமல் தொடர்வதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். இலங்கைக்கு 5 சதவீத வளர்ச்சி விகிதம் தேவைப்பட்டாலும், தற்போதைய வளர்ச்சி 3.1 முதல் 3.5 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதனால் மக்கள் கடனாளிகளாக மாறி, தங்கள் சொத்துக்களை அடமானம் வைக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைகளும் தீர்க்கப்படாமல் உள்ளன.
எனவே, ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக இருந்து மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.