தளபதி விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைக்க மற்றொரு காரணம் கிடைத்துள்ளது. வரும் தீபாவளிக்கு தளபதியின் ‘ஜன நாயகன்’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இது, சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
படத்தின் முதல் சிங்கிளை தளபதி விஜய் அவர்களே பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனிருத் இசையில் தளபதி குரலில் பாடல் என்பது ரசிகர்களுக்கு தீபாவளி விருந்துக்கு இணையானதாக அமையும் என்பதால், இந்தச் செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் களத்தில் இறங்கும் முன், நடிகர் விஜய் நடிப்பில் இதுவே கடைசி படம் என்பதால், ‘ஜன நாயகன்’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், இப்படத்தில் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன் திலீப்குமார் ஆகியோர் பத்திரிக்கையாளர்களாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.
படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே, விஜய் நடிப்பை விட்டுச் செல்வது வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளார். “விஜய் சார் ஒரு கூலான மற்றும் மிக இனிமையான ஒரு நடிகர். அவருக்கு பெரிய கனவுகள் இருக்கின்றன. அதைத் தொடர அவருக்கு முழு உரிமை உண்டு” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜன நாயகன்’ படத்தில், போலிஸ் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறும் கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கிறார். ஜனவரி 9, 2026-ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இப்படம், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வெளியாவது குறிப்பிடத்தக்கது.