‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் “வீரா ராஜ வீரா” பாடல் காப்புரிமை தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் தற்போது ரத்து செய்துள்ளது.
முன்னதாக, கிளாசிக்கல் பாடகர் உஸ்தாத் ஃபயாஸ் வாசிஃபுதீன் டகர், “வீரா ராஜ வீரா” பாடல் தனது குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட “சிவா ஸ்துதி” என்ற இசை அமைப்பை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறி, காப்புரிமை மீறல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரஹ்மான் மற்றும் படத் தயாரிப்பாளர்கள் இரண்டு கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ரஹ்மான் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், இசையை வழங்குபவர் தானாகவே இசையமைப்பாளர் ஆகிவிடுவதில்லை. இது கொள்கை ரீதியாகவும், சட்டத்தின் அடிப்படையிலும் தவறான அணுகுமுறை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்த உத்தரவு, ரஹ்மானுக்கு ஒரு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது. எனினும், காப்புரிமை மீறல் குறித்த விரிவான விசாரணை தொடரும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.