பாலஸ்தீன் அதிரடி (Palestine Action) குழுவிற்கு இங்கிலாந்து அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, லண்டனில் நடந்த போராட்டத்தின் போது 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீன் அதிரடி அமைப்புக்கு இங்கிலாந்து அரசு, பயங்கரவாத தடுப்புச் சட்டம் 2000-இன் கீழ் தடை விதித்துள்ளது. இதன் மூலம், இந்த அமைப்பில் உறுப்பினராக இருப்பதோ அல்லது அதற்கு ஆதரவு தெரிவிப்பதோ கிரிமினல் குற்றமாக கருதப்படும். இத்தடை உத்தரவு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தது.
தடை அமுலுக்கு வந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, பாராளுமன்ற சதுக்கத்தில் பாலஸ்தீன் அதிரடிக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பெருமளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பாதிரியார் மற்றும் சுகாதார நிபுணர்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீன் அதிரடி அமைப்பு இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு இங்கிலாந்து வழங்கும் ஆதரவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. சமீபத்தில், இங்கிலாந்தின் இராணுவ விமான தளத்தில் விமானங்களுக்கு சேதம் விளைவித்த சம்பவத்தை அடுத்து இந்த தடை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐ.நா. நிபுணர்கள் மற்றும் சிவில் உரிமைகள் அமைப்புகள் இந்த தடையை “கொடுமையானது” என்று கண்டித்துள்ளன.