டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 43 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் அதிகமானோரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கெர் கவுண்டி பகுதியில் வெள்ளம் மிகவும் அதிகமாக இருந்ததால், அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் அங்கு நிகழ்ந்துள்ளன. அங்கு 43 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் 15 பேர் குழந்தைகள் என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், ட்ராவிஸ் கவுண்டியில் 4 பேரும், பர்னெட் கவுண்டியில் 3 பேரும், கெண்டல் கவுண்டியில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 850 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மரங்களை பற்றிக்கொண்டிருந்தவர்களும் இதில் அடங்குவர். கேம்ப் மிஸ்டிக் (Camp Mystic) என்ற கோடைக்கால முகாமில் இருந்து 27 சிறுமிகள் உட்பட பலர் இன்னும் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள், படகுகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தொடர் கனமழை காரணமாக குவாடலூப் நதியில் நீர்மட்டம் 22 அடிக்கு மேல் உயர்ந்தது, இதனால் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு, வாகனங்கள் மூழ்கின.
டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட், மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி வழங்கவும் அவசரகாலப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.