கரூர், தமிழ்நாடு: தமிழகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய ஒரு அதிர்ச்சிச் சம்பவம் கரூரில் நேற்று அரங்கேறியுள்ளது. நடிகர் விஜய் கலந்துகொண்ட அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கொடூரமான கூட்ட நெரிசலில் (Stampede) சிக்கி, 8 குழந்தைகள் உட்பட மொத்தம் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
துயரச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை!
தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்தக் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறையின் சார்பில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நெரிசலுக்கான உண்மையான காரணம் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்தும் தனிப்படைகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
“கூட்டம் போடாதீர்கள் – வாழ்வைத் தொலைக்க!” – பார்த்திபனின் உருக்கமான பதிவு
இந்த கோரச் சம்பவத்தால் மனமுடைந்த நடிகர் பார்த்திபன், தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (X) தளத்தில் உருக்கமான மற்றும் ஆவேசமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
“‘கூட்டம்’ என்ற ஒற்றை வார்த்தைக்குப் பின்… 10, 100, 1000, 1000000000000000000000 போன்ற பூஜ்ய உயிர்களின் அன்பும், பாசமும், தன்னலமற்ற ஊக்கப்படுத்துதலும், வலியும், வேதனையும் முடிவில் கேள்விக் கேட்பாறற்ற பிணங்களாய் வெள்ளைப் போர்த்தி, வண்ண மாலை சாத்தி, (இருந்தால்) உறவினர்களின் கண்ணீர் ஆற்றில் கரைக்கச் சொல்லி…
‘கொடுத்து வைத்தவர்கள்’ ஓட்டுப் போடுங்கள் – விரும்பும் நபர்களுக்கு, ஆனால் கூட்டம் போடாதீர்கள் – வாழ்வைத் தொலைக்க!
அதிலும் இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சப் பூக்களாய் குழந்தைகளைப் பலியாக்காதீர்கள்.”
இவ்வாறு பார்த்திபன் தனது வேதனையையும், எச்சரிக்கையையும் அந்தப் பதிவில் ஆழமாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு மக்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்யும் போது, மக்களின் பாதுகாப்புக்கு இன்னும் கூடுதல் கவனம் தேவை இல்லையா?