யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஏராளமான மனித எலும்புக்கூடுகள், தமிழக நடிகர் சத்யராஜை கடும் வேதனைக்கும், கோபத்திற்கும் ஆளாக்கியுள்ளன. இந்த கோரமான காட்சிகள், பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட அனைத்து எலும்புக்கூடுகளும் தமிழர்களுடையதாகத்தான் இருக்கும் என உறுதியாகக் கூறப்படுவதாக சத்யராஜ் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்குக் காரணம், அந்தப் பகுதி போர் காலத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. மேலும், அந்த மயானத்தில் கடந்த காலத்தில் உடல்கள் எரிக்கப்பட்டனவே தவிர, புதைக்கப்படவில்லை என்ற தகவலும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. தாய், சேய், இளைஞர்கள், யுவதிகள், பெரியவர்கள் என பலரது எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மிகவும் நெஞ்சை உலுக்கும் வகையில், புத்தகப்பையுடன் ஒரு சிறுவனின் எலும்புக்கூடும் மீட்கப்பட்டிருப்பது, மனிதாபிமானமற்ற கொடூரச் செயலாகக் கருதப்படுகிறது. இத்தகைய செயல்களைச் செய்தவர்களிடமே நீதியை எதிர்பார்ப்பது வீண் என்றும் சத்யராஜ் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொடூரமான விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார். உலக நாடுகள் அனைத்தின் கவனத்திற்கும் இந்த கொடூரமான செயலைக் கொண்டு செல்ல வேண்டும் எனவும், அதற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் நடிகர் சத்யராஜ் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.