ஏற்கனவே உள்நாட்டுப் போர், வறட்சி, பொருளாதாரத் தடைகளால் சிக்கித் தவிக்கும் சிரியாவுக்கு, தற்போது மிகப் பெரிய அச்சுறுத்தலாகக் காட்டுத்தீ உருவெடுத்துள்ளது! கடந்த வியாழக்கிழமை முதல் சிரியாவின் கடலோர மலைப்பகுதியான ஜபல் துர்க்மானில் பரவி வரும் காட்டுத்தீ, ஆயிரக்கணக்கான ஹெக்டேர் வனப்பகுதியை அழித்து, அவசரகால சேவைகளை திக்குமுக்காட வைத்துள்ளது!
லடாகியா மாகாண சிவில் பாதுகாப்புத் துறை இயக்குநர் அப்தெல் காஃபி காயல் கூறுகையில், “பலத்த காற்று, கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் பல ஆண்டுகளாக நடந்த போரினால் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள் ஆகியவை தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு பெரும் தடையாக உள்ளன” என்றார்.
சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு தீ பரவியுள்ளதால், சாலைகள் துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சில பகுதிகள் மின்சாரம் இல்லாமலும் இருளில் மூழ்கியுள்ளன.
ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட காணொலிகளில், காய்ந்து போன வனப்பகுதிகளில் தீயின் கோரத் தாண்டவம் வேகமாகப் பரவுவது தெளிவாகத் தெரிகிறது. “இந்தத் தீயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்” என்று காயல் தெரிவித்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடுதல் தீயணைப்புப் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது டார்ட்டஸ் மாகாணத்தின் சில பகுதிகளுக்கும் தீ பரவியுள்ள நிலையில், 60க்கும் மேற்பட்ட தீயணைப்புப் பிரிவுகள் தீயை அணைக்கும் பணியில் போராடி வருகின்றன.
சிரியா அதிகாரிகள் சர்வதேச உதவியை நாடியுள்ளனர். துருக்கி இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் 11 தீயணைப்பு வாகனங்களை அனுப்பியுள்ளது. நேற்றைய தினம் ஜோர்டான் சிவில் பாதுகாப்புப் படைகளும் எல்லை தாண்டி வந்து தீயை அணைக்கும் பணிகளில் இணைந்துள்ளன.
நாசாவின் FIRMS சேவை மூலம் பெறப்பட்ட செயற்கைக்கோள் தரவுகளின்படி, தீயில் எரிந்த பகுதி தற்போது 180 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமாக உள்ளது. இது தலைநகர் டமாஸ்கஸை விட பெரிய பரப்பளவு ஆகும். சிரிய அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மொத்த வனப்பரப்பு சுமார் 5,270 சதுர கிலோமீட்டர்கள். இதன்மூலம், கடந்த மூன்று நாட்களில் நாட்டின் மொத்த வனப்பகுதியின் 3% க்கும் அதிகமான பகுதி தீயில் அழிந்துவிட்டது என்பது அதிர்ச்சியளிக்கிறது.
சிரியா கடந்த நான்கு ஆண்டுகளாகக் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. கார்னகி எண்டோவ்மென்ட் மத்திய கிழக்குத் திட்டம் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், யூப்ரடீஸ் படுகை பகுதி முழுவதும், குறிப்பாக சிரியாவின் தெற்கு மற்றும் கிழக்கு பாலைவனப் பகுதிகள், குறைந்த மழைப்பொழிவு மற்றும் அசாதாரணமாக அதிக வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வறண்ட சூழல் தான் தற்போதைய காட்டுத்தீயின் தீவிரத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.