ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் சமீபத்திய வாரங்களில் தனது முதல் வான்வழித் தாக்குதல்களை நேற்றைய தினம் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, ஹவுதிகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
செங்கடலில் லைபீரியக் கொடியுடன் கூடிய, கிரேக்கத்திற்குச் சொந்தமான ‘மேஜிக் சீஸ்’ என்ற சரக்குக் கப்பல் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்தே இந்த மோதல் அதிகரித்துள்ளது. கப்பல் தீப்பிடித்து, அதன் ஊழியர்களால் கைவிடப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஹவுதிகள் பொறுப்பேற்கவில்லை என்றாலும், குண்டு நிரப்பப்பட்ட ட்ரோன் படகுகளால் கப்பல் தாக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் நம்புகின்றன.
இஸ்ரேலிய ராணுவம், ஹோடைடா, ராஸ் இசா, சலீஃப் ஆகிய ஹவுதிகளின் முக்கிய துறைமுகங்கள் மற்றும் ராஸ் கனதிப் மின் நிலையம் ஆகியவற்றில் தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளது. “ஈரானில் இருந்து ஆயுதங்களை கொண்டு செல்வதற்கும், இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஹவுதி பயங்கரவாத ஆட்சி இந்த துறைமுகங்களை பயன்படுத்துகிறது” என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
நவம்பர் 2023 இல் ஹவுதிகளால் கைப்பற்றப்பட்ட ‘கேலக்ஸி லீடர்’ என்ற சரக்குக் கப்பலும் இலக்குகளில் ஒன்றாகும். இந்த கப்பலில் ஹவுதிகள் ரேடார் கருவிகளை நிறுவி சர்வதேச கடல் போக்குவரத்தைக் கண்காணித்து மேலும் தாக்குதல்களை திட்டமிடுவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
ஹவுதிகள் இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதல்களை ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் சேதத்தின் அளவை வெளியிடவில்லை. அவர்களின் இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யாஹ்யா சரீ, தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்குதல்களை “பயனுள்ள முறையில் எதிர்கொண்டதாக” கூறிக்கொண்டாலும், அதற்கான ஆதாரம் எதுவும் வழங்கப்படவில்லை.
காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் இன்னும் நிச்சயமற்ற நிலையில், அமெரிக்கா ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை குறித்த தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து வரும் நிலையில், இப்பகுதியில் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டன் சென்றுள்ளார். இந்த புதிய மோதல் அப்பகுதி ஸ்திரத்தன்மைக்கு மேலும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.