மியாமியில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் (Miami Grand Prix 2026) கார் பந்தயத்தின் போது, ஸ்கை ஸ்போர்ட்ஸ் (Sky Sports) நேரலையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. முன்னாள் உலக சாம்பியன் ஜென்சன் பட்டன் (Jenson Button) நேரலையில் தீவிரமாக விளக்கமளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென கேமராமேனின் கவனம் அங்கிருந்த ஒரு அழகிய பெண் மீது திரும்பியது. அந்தப் பெண் வேறயாருமல்ல, உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் போது “உலகின் கவர்ச்சிகரமான ரசிகை” என்று பெயரெடுத்த முன்னாள் மிஸ் குரோஷியா இவானா நால் (Ivana Knoll) என்பது குறிப்பிடத்தக்கது.

நேரலை ஒளிபரப்பின் போது ஜென்சன் பட்டனைப் படம் பிடிக்க வேண்டிய கேமரா, திடீரென அவரை விட்டு விலகி, கறுப்பு நிற ஆடையில் நடந்து சென்ற இவானா நால் மீது சில நொடிகள் நிலைத்து நின்றது. கேமராமேன் தனது வேலையை மறந்து அந்த அழகியைத் தொடர்ந்தது ரசிகர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. “கேமராமேன் தனது இலக்கை மறந்துவிட்டார்” என்றும், “இவானாவின் அழகில் நேரலையே ஸ்தம்பித்துவிட்டது” என்றும் நெட்டிசன்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தின் உச்சகட்டமாக, அங்கிருந்த மெக்லாரன் (McLaren) அணியின் மெக்கானிக் ஒருவரின் ரியாக்ஷன் தான் இப்போது மீம்ஸாக மாறி வருகிறது. இவானா நால் நடந்து செல்வதைப் பார்த்து அந்த மெக்கானிக் வியப்பில் உறைந்து போனதும், அந்தத் தருணம் கேமராவில் பதிவானதும் வைரலாகி உள்ளது. பந்தயக் களத்தில் நிலவும் கடும் அழுத்தங்களுக்கு மத்தியில், இந்தத் தற்செயலான நிகழ்வு ரசிகர்களுக்கு ஒரு குதூகலமான மாற்றத்தைத் தந்துள்ளது.
தற்போது ஒரு டிஜே (DJ) ஆகவும் புகழ்பெற்று வரும் இவானா நால், இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “இந்த வீடியோ டிக்டாக்கில் வைரலாகி வருகிறது” என சிரிப்புடன் பதிவிட்டுள்ளார். மியாமி கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் தொடங்குவதற்கு முன்பே, இது போன்ற சுவாரஸ்யமான சம்பவங்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.