மனித குலத்தின் பேரவலச் சாட்சியமாக மாறிவரும் யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 5 என்புத் தொகுதிகள் (மனித எலும்புக் கூடுகள்) அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த அதிர்ச்சித் தகவலை சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம், இதுவரை இந்த புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மொத்த என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இந்த 52 தொகுதிகளில், 47 தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக, அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளில் 4 தொகுதிகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த நிலையில் காணப்படுவதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார். இது இந்தச் சம்பவத்தின் கோரமான பக்கத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இந்த மனிதப் புதைகுழி, செம்மணியில் புதைந்திருக்கும் பல ரகசியங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் வெளிவரும் புதிய தகவல்கள், அப்பகுதி மக்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மை வெளிவருமா என்பதை உலகமே உற்றுநோக்குகிறது.