Posted in

அனிருத்தை களற்றிவிட்ட சிவகார்த்திகேயன்: கை கோர்த்தது யாருடன் என்று தெரியுமா ?

சினிமா உலகில் சில வெற்றிக் கூட்டணிகளைப் பிரிப்பது கடினம். வெற்றிமாறன் – ஜி.வி. பிரகாஷ், செல்வராகவன் – யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா போன்ற கூட்டணியினர் இணைந்து பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்துள்ளனர். இதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் (எஸ்.கே) ஆரம்ப காலத்தில் தன் படங்களுக்கு இசையமைப்பாளர் டி. இமானுடன் இணைந்து சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தார். ஒரு கட்டத்தில் இவர்களின் கூட்டணி பிரிந்தது.

சிவகார்த்திகேயனுக்கு அனிருத் இசையமைத்த முதல் படம் ‘எதிர் நீச்சல்’. தனுஷ் தயாரித்திருந்த இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘காக்கி சட்டை’, ‘ரெமோ’ ஆகிய படங்களுக்கும் அனிருத்தே இசையமைத்தார். சிவகார்த்திகேயனுக்கும் அனிருத்துக்கும் இடையில் ஏற்பட்ட நெருங்கிய நட்பின் காரணமாக, ‘இனிமேல் என் படங்களுக்கு அனிருத் மட்டுமே இசை’ என சிவகார்த்திகேயன் உறுதியாக முடிவெடுத்தார்.

அதே சமயத்தில், தனுஷின் எல்லா படங்களுக்கும் அனிருத் இசையமைத்து வந்தார். அந்தக் கூட்டணியிலும் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வந்தன. ஆனால், அனிருத் சிவகார்த்திகேயனுடன் நெருக்கம் காட்டியதால், தனுஷ் – அனிருத் கூட்டணி முறிந்தது.

இப்போது சிவகார்த்திகேயனால், மற்றொரு அசைக்க முடியாத கூட்டணிகூடப் பிரியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ‘சென்னை 28’ முதல் சமீபத்திய ‘கோட்’ (GOAT) வரை வெங்கட் பிரபு இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் அவருடைய சகோதரர் யுவன் சங்கர் ராஜாதான் இசை. “வெங்கட் பிரபு கேமரா இல்லாமல் கூடப் படமெடுப்பார், ஆனால் யுவன் இல்லாமல் படமே எடுக்க மாட்டார்” என்று ரசிகர்கள் கேலி செய்வதும் உண்டு.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். சிவகார்த்திகேயன் இந்தக் கூட்டணியில் பிடிவாதமாக இருந்ததால், வெங்கட் பிரபு வேறு எதுவும் பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டாராம்.

இதேவேளை, ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவுள்ள படத்துக்கு இசையமைக்கப் போவது சாய் அபயங்கர் என்ற இசையமைப்பாளராம். அனிருத் இல்லாமல் வேறு ஒரு இசையமைப்பாளருடன் பணியாற்ற சிவகார்த்திகேயன் எப்படிச் சம்மதித்தார் என்பது தெரியவில்லை என்று திரையுலக வட்டாரங்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன.

Loading