Posted in

டிக்டாக் செயலி ஒப்பந்தத்தில் பெரும் திருப்பம்! என்ன நடக்கிறது?

வாஷிங்டன்/பெய்ஜிங்: உலகையே உலுக்கிய டிக்டாக் விற்பனை விவகாரத்தில், அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்! டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாடுகளை வாங்குவதற்கு ஒரு நிறுவனத்துடன் “ஏறக்குறைய ஒப்பந்தம் எட்டப்பட்டுவிட்டது” என்று டிரம்ப் அதிரடியாக அறிவித்த நிலையில், சீனா இந்த விவகாரம் குறித்து மழுப்பலான பதிலைக் கொடுத்து மர்மத்தை அதிகரித்துள்ளது!

கடந்த வெள்ளிக்கிழமை அன்று டிரம்ப் செய்தியாளர்களிடம், “டிக்டாக் விவகாரத்தில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுவிட்டது. இந்த வாரம் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை சீன அதிபர் ஷி ஜின்பிங் அல்லது அவரது பிரதிநிதிகளுடன் பேசவிருக்கிறோம். இந்த ஒப்பந்தம் சீனாவுக்கும் எங்களுக்கும் நல்லது” என்று கூறி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்.

சீனாவின் அதிர்ச்சி மௌனம்!

ஆனால், டிரம்ப்பின் இந்த அதிரடி அறிவிப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர்கள் நேரடியான பதிலைத் தவிர்த்துவிட்டனர்! சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “டிக்டாக் தொடர்பான அமெரிக்காவின் கூற்றுக்கள் குறித்து நாங்கள் பலமுறை எங்கள் கொள்கை நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளோம். சீனா தனது சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி தொடர்புடைய விஷயங்களைக் கையாளும். அமெரிக்கா தனது நாட்டில் உள்ள சீன வணிகங்களுக்கு ஒரு திறந்த, நியாயமான, நேர்மையான மற்றும் பாகுபாடற்ற சூழலை வழங்க வேண்டும்” என்று வழக்கமான பதிலைக் கூறி மர்மத்தை மேலும் ஆழப்படுத்தினார்.

சீனாவின் இந்த மழுப்பலான பதில், டிக்டாக் விற்பனைக்கு உண்மையில் சீனா ஒப்புதல் அளிக்குமா? அல்லது இது டிரம்ப்பின் வெறும் அரசியல் நகர்வா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. முன்னதாக, டிக்டாக் அதன் சீனத் தாய் நிறுவனமான பைட் டான்ஸிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்று அமெரிக்கா விதித்த காலக்கெடுவும், டிரம்ப் அதை நீட்டித்ததும் குறிப்பிடத்தக்கது.

“மிகவும் பணக்காரர்கள்” கொண்ட ஒரு குழு டிக்டாக்-ஐ வாங்கத் தயாராக இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். இந்த மெகா ஒப்பந்தம் உறுதியாகுமா, அல்லது சீனாவின் மர்மமான மௌனம் இதை முடக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!