பொதுமக்களின் காணிகளை கடற்படையினர் அளவீடு செய்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என கடற்படைப் பேச்சாளர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எனினும், நாட்டின் கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் வழமையாக மேற்கொள்ளப்படும் அளவீடுகள் மற்றும் ஆய்வுகள் தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம் 435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் கடற்படையினரால் இரகசியமாக அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் குற்றம் சுமத்தியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தருக்கோ அல்லது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கோ எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். கடற்படைப் பேச்சாளர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.