ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், தற்போதைய பிரேசில் தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளருமான கார்லோ அன்செலோட்டிக்கு வரி மோசடி வழக்கில் ஸ்பெயின் நீதிமன்றம் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ரியல் மாட்ரிட் பயிற்சியாளராக 2014 ஆம் ஆண்டில் இருந்தபோது, தனது உருவப்பட உரிமைகள் மூலம் கிடைத்த வருமானத்தை மறைத்து, சுமார் 1 மில்லியன் யூரோக்கள் ($1 மில்லியன்) வரி ஏய்ப்பு செய்ததாக அன்செலோட்டி மீது ஸ்பெயின் அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த வழக்கில் அவருக்கு நான்கு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் வரை சிறைத்தண்டனை கோரப்பட்டது.
மட்ரிட் நீதிமன்றம் அன்செலோட்டிக்கு 386,000 யூரோக்கள் (சுமார் $452,187) அபராதமும் விதித்துள்ளது. இருப்பினும், ஸ்பெயின் சட்டத்தின்படி, முதல் முறையாக குற்றம் செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், அது பொதுவாக நிறுத்தி வைக்கப்படும் என்பதால், அன்செலோட்டி சிறைவாசம் அனுபவிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்செலோட்டி தனது வருமானத்தை மறைக்க, வர்ஜின் தீவுகளில் “எந்த ஒரு உண்மையான பொருளாதார நடவடிக்கையும் இல்லாத” ஷெல் நிறுவனங்களைப் பயன்படுத்தியதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும், அன்செலோட்டி தரப்பு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜோஸ் மொரினோ போன்ற பல கால்பந்து பிரபலங்கள் ஏற்கனவே ஸ்பெயினில் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நிலையில், அன்செலோட்டி இந்த வரி மோசடி வழக்கில் சிக்கியுள்ள சமீபத்திய பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.