Posted in

“சிங்கப் பெண்ணே” பாடலை போட்டு விஜய் ரசிகர்கள் செய்யும் அலப்பறை: யார் இந்த IPS இஷா சிங்

கூட்டம் அதிகரித்ததால் கடுப்பான பொலிஸ் அதிகாரி இஷா சிங், முதலில் புஷி ஆனந்தோடு வாக்குவாதப் பட்டாலும், பின்னர் சமரசம் ஆகிவிட்டார். இதனைக் கொண்டாடும் வகையில், விஜய் ரசிகர்கள் பல நூறு மீம்ஸை வெளியிட்டு, “சிங்கப் பெண்ணே” பாடலையும் போட்டு அதிகாரி இஷா சிங்கை கெளரவப்படுத்தியுள்ளார்கள். இதனால் 24 மணி நேரத்தில் பாண்டி மட்டும் அல்ல, தமிழ் நாட்டிலும் இஷா சிங் பிரபல்யம் ஆகிவிட்டார் போங்கள் !

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கரூர் கூட்ட நெரிசலுக்குப் பிறகு சுமார் 72 நாட்களுக்குப் பின், புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் அக்கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் விஜய் பங்கேற்பதற்காக ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே கியூ.ஆர். கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனினும், ஏராளமான தொண்டர்கள் காலை 6 மணி முதல் மைதானத்தில் திரளத் தொடங்கியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேரம் செல்லச் செல்லக் கட்டுக்கடங்காத நெரிசல் ஏற்பட, பாஸ் இல்லாத தொண்டர்கள் போலீஸ் தடுப்புகளைத் தள்ளிவிட்டு மைதானத்துக்குள் நுழைய முற்பட்டனர். நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை ஒழுங்குபடுத்தினர். அப்போது, காலை 9 மணியளவில், பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்கக் கோரி கட்சியின் முக்கிய நிர்வாகியான புஸ்சி ஆனந்த் உட்பட சிலர் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங்கிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனால் ஆவேசமடைந்த எஸ்.பி. இஷா சிங், “காவல்துறை என்ன செய்ய வேண்டும் என நீங்கள் உத்தரவிடாதீர்கள். கரூரில் 41 பேர் பலியான சம்பவம் நினைவில்லையா? அசம்பாவிதங்கள் நடக்கக் கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளைச் சரியாகப் பின்பற்றுங்கள்” எனக் கறாராக எச்சரித்தார்.  இந்தச் சம்பவத்தால் இஷா சிங் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவர் 2021-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியானவர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் புதுச்சேரி கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டாகப் பணியில் சேர்ந்தார்.

அண்மையில், லஞ்ச ஒழிப்புத் துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டாகப் பதவி உயர்வு பெற்ற இவர், சுகாதாரத்துறையில் நடந்த போலி மருந்து மோசடி வழக்கில் துணிச்சலுடன் செயல்பட்டு, இரண்டு முன்னாள் இயக்குநர்கள் உட்பட ஆறு பேரை அதிரடியாகக் கைது செய்து பிரபலமானவர். இஷா சிங்கின் தாத்தாவும், தந்தையான ஒய்.பி. சிங்கும் கூட ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான். சட்டப் படிப்பு முடித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர், சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்.

விஷவாயு தாக்கி உயிரிழந்த மனிதக் கழிவுகளை அப்புறப்படுத்தும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்காக வாதாடி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியாற்றும் இவர், ஐ.ஏ.எஸ். மற்றும் நீதிபதிக்கான தேர்வுகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.