Posted in

சிக்கலில் யூடியூபர் முக்தார்; மேலும் 20 புகார்கள் இருப்பதாகப் போலீஸ் அதிரடி அறிக்கை!

பிரபல கார் பந்தய வீராங்கனையும், பாஜக நிர்வாகியுமான அலிஷா அப்துல்லா மற்றும் அவரது இரட்டைக் குழந்தைகள் குறித்து யூடியூபில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிய வழக்கில், ‘மை இந்தியா 24X7’ (MY INDIA 24X7) யூடியூப் சேனலைச் சேர்ந்த முக்தார் அகமது (48) சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் அண்மையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் மாண்டியாவில் வைத்துத் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அலிஷா அப்துல்லா கடந்த ஜூன் 3 அன்று சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரில், முக்தாரின் யூடியூப் சேனலில் வெளியான நேர்காணல் வீடியோ ஒன்றில், தன்னைப் பற்றியும் தனது பிஞ்சு இரட்டைக் குழந்தைகள் குறித்தும் மிகவும் ஆபாசமான, அவதூறான மற்றும் கண்ணியக் குறைவான கருத்துகள் பரப்பப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார் . இந்த நேர்காணலில் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா ஏற்கனவே ஜூன் 4 அன்று கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த முக்தாரையும் போலீசார் தற்போது கூண்டோடு தூக்கியுள்ளனர் .

இந்நிலையில், கைதான யூடியூபர் முக்தார் மீது சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் மேலும் 20-க்கும் மேற்பட்ட புகார்கள் நிலுவையில் இருப்பதாகக் சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் தொடர்ந்து பலரை அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டு வந்த முக்தார் மீது ஏற்கனவே இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தற்போதைய விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது .

இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் பெண்களின் கண்ணியத்தைக் கெடுக்கும் வகையிலும், சட்டவிரோதமாகவும் ஆபாசக் கருத்துகளைப் பதிவிடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மிகக் கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகள் பாயும் என்று காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எல்லை மீறி அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது காவல்துறை எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கைகள் இணையவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.