பிரித்தானியாவின் லண்டன் நகரில் உள்ள ‘தி பிஷப்ஸ் அவென்யூ’ (The Bishops Avenue), உலகப் பணக்காரர்கள் வசிக்கும் ‘பில்லியனர்ஸ் ரோ’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில், ஈரானின் புதிய உச்ச தலைவராகக் கருதப்படும் மொஜ்தபா கமேனியின் (Mojtaba Khamenei) நிதி மேலாளராகச் செயல்படும் அலி அன்சாரி (Ali Ansari) என்பவர், சுமார் 33 அல்ட்ரா-லக்ஸரி (Ultra-lux) குடியிருப்புகளைக் கட்ட அனுமதி பெற்றுள்ளார். ஈரானிய ஆட்சியுடன் தொடர்புடைய ஒரு நபர், லண்டனின் மிக முக்கியமான பகுதியில் இவ்வளவு பெரிய ரியல் எஸ்டேட் திட்டத்தை முன்னெடுப்பது பாதுகாப்பு நிபுணர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான புலனாய்வுத் தகவல்களின்படி, அலி அன்சாரி மற்றும் அவருடன் தொடர்புடைய நிறுவனங்கள் லண்டனில் சுமார் 100 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக, இஸ்ரேல் தூதரகத்திற்கு மிக அருகிலேயே மொஜ்தபா கமேனிக்குச் சொந்தமான குடியிருப்புகள் இருப்பதாகவும், அங்கிருந்து தூதரகத்தைக் கண்காணிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. தற்போது பில்லியனர்ஸ் ரோவில் கட்டப்படவுள்ள இந்த 33 புதிய வீடுகள், ஈரானிய ஆட்சியின் கறுப்புப் பணத்தைச் சட்டப்பூர்வமாக்கும் (Money Laundering) முயற்சியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் பிரித்தானிய அரசின் மெத்தனப் போக்கை ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அதன் நிழல் மனிதர்களாகச் செயல்படும் தொழிலதிபர்கள் லண்டனின் ரியல் எஸ்டேட் சந்தையில் தங்கு தடையின்றி முதலீடு செய்து வருகின்றனர். இதனால்தான் பிரித்தானிய அரசை ‘பற்களற்ற அரசு’ (Toothless UK) என்று சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர். வெளிநாட்டு ஏதேச்சதிகார ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய முதலீடுகளைக் கட்டுப்படுத்த வலுவான சட்டங்கள் இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தச் சொகுசு குடியிருப்புகள் ஒவ்வொன்றும் பல மில்லியன் பவுண்டுகள் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதில் கிடைக்கும் லாபம் ஈரானின் தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகளுக்கு மறைமுகமாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், லண்டனின் இதயப்பகுதியில் ஈரானின் இத்தகைய பொருளாதார ஊடுருவல், சர்வதேச அரசியலில் ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பிரித்தானிய உளவுத்துறை இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.