நடிகர் தனுஷ் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள ‘இட்லி கடை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்தப் படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், தனது படத்தின் கதைக்கும் அவரது குழந்தை பருவத்துக்கும் உள்ள தொடர்பு குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், “நான் சின்னப் பையனாக இருந்தபோது எங்கள் ஊரில் ஒரு இட்லிக் கடை இருந்தது. அந்தக் கடையில் எப்படியாவது இட்லி சாப்பிட வேண்டும் என்று எனக்கு தினமும் தோன்றும். ஆனால், என் கையில் காசு இருக்காது. காலையில் வயலுக்குப் போய் பூ பறித்தால் தான் பணம் கிடைக்கும். அதனால் நானும் என் அக்காவும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து இரண்டரை மணி நேரம் பூ பறிப்போம். அதற்கு ஆளுக்கு இரண்டு ரூபாய் கிடைக்கும். அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு நேராக இட்லிக் கடைக்குச் சென்று இரண்டு ரூபாய் கொடுத்து 4 இட்லிகள் வாங்கி சாப்பிடுவோம்” என்று கூறினார்.
“அப்படி கஷ்டப்பட்டு உழைத்துச் சாப்பிடும்போது கிடைக்கும் சுவையும், நிம்மதியும், சந்தோஷமும் பெரிய பெரிய உணவகங்களில் கூட எனக்குக் கிடைக்காது. இந்தக் இட்லிக் கடையை வைத்து நாம் ஏன் ஒரு படம் எடுக்கக் கூடாது என்று ஒரு நாள் தோன்றியது. அதனால், வெறும் இட்லிக் கடை மட்டுமின்றி, என் மனதை பாதித்த சில உண்மைக் கதாபாத்திரங்களையும் சேர்த்து எழுதப்பட்ட கற்பனையான கதை தான் இந்த ‘இட்லி கடை’ படத்தின் கதை” என்று தனுஷ் மேடையில் நெகிழ்ந்து பேசினார்.