இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் ரசிகர்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சியான செய்தி பரவி வருகிறது. வரும் யூலை 26 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருந்த அவரது இசை நிகழ்ச்சி திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் தனது இசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டிருக்கும் அனிருத், விரைவில் கன்னடத் திரையுலகிலும் கால் பதிக்கவுள்ளார். படங்களுக்கு இசையமைப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி பெரும் ரசிகர் பட்டாளத்தை ஈர்த்து வருகிறார். இவரது கச்சேரிகள் பெரும் வரவேற்பைப் பெற்று, அதன் மூலம் கணிசமான வருமானத்தையும் ஈட்டி வருகிறார்.
தற்போது ரத்து செய்யப்பட்ட சென்னை நிகழ்ச்சிக்கு டிக்கெட்டுகளுக்கு அதிக தேவை இருந்ததால், இன்னும் பெரிய இடத்தில் கச்சேரியை நடத்த இடம் மாற்றப்பட்டுள்ளது என்று அனிருத் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். புதிய இடம் மற்றும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத்தின் நேரடி இசையை அனுபவிக்க ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த திடீர் ரத்து சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.