“இளையராஜாவின் குடைச்சல்”: புதிய பாடல்களுடன் குட் பேட் அக்லி திரைப்படம் மீண்டும் ஓடிடியில்

“இளையராஜாவின் குடைச்சல்”: புதிய பாடல்களுடன் குட் பேட் அக்லி திரைப்படம் மீண்டும் ஓடிடியில்

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த சட்டப் போராட்டத்தின் காரணமாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்ட “குட் பேட் அக்லி” திரைப்படம் தற்போது மீண்டும் சில மாற்றங்களுடன் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் இளையராஜாவின் பாடல்களுக்குப் பதிலாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் புதிய பாடல்களை இசையமைத்துள்ளார்.

சினிமாவில் என்ன நடந்தது?

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படம் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில், சிம்ரன் எனப் பலரும் நடித்திருந்தனர். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை ரசித்து எடுத்திருந்ததால், அஜித் தனது படத்திலேயே ஒல்லியான தோற்றத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். இப்படத்தில் இளையராஜா இசையமைத்த “ஒத்த ரூபா தாரேன்”, “என் ஜோடி மஞ்ச குருவி”, மற்றும் “இளமை இதோ இதோ” உள்ளிட்ட பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இளையராஜாவின் வழக்கு

தனது அனுமதி இல்லாமல் இந்தப் பாடல்களைப் படத்தில் பயன்படுத்தியதாகக் கூறி, இளையராஜா தரப்பிலிருந்து ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டு வழக்குத் தொடரப்பட்டது. அத்துடன், தயாரிப்பு நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காப்புரிமை மீறல் சட்டத்தின் கீழ் இளையராஜா தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்தார். இதற்கிடையே, இந்தப் படம் கடந்த மே 8-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இளையராஜாவின் சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை உடனடியாக நீக்கியது. தற்போது, இளையராஜாவின் பாடல்களுக்குப் பதிலாக புதிய பாடல்களுடன் “குட் பேட் அக்லி” திரைப்படம் மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.