இளையராஜா, நான் நேரில் கண்ட அதிசயம் – ரஜினிகாந்த்

இளையராஜா, நான் நேரில் கண்ட அதிசயம்  – ரஜினிகாந்த்

இசைஞானி இளையராஜாவை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், “இளையராஜா நான் நேரில் கண்ட அதிசயம்,” என்று புகழாரம் சூட்டினார். “உலக மக்களின் உணர்வுகளிலும், ரத்தத்திலும் அவரது பாடல்கள் கலந்திருக்கின்றன. எனது ‘கூலி’ திரைப்படத்திலும் அவரது பாடல்களைப் பயன்படுத்தியிருக்கிறோம்,” என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

மேலும், “இசை அமைப்பாளராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக 1500க்கும் அதிகமான பாடல்களை இசையமைத்திருப்பது மிகப்பெரிய சாதனை. அவர் ராகங்களை அள்ளிக்கொடுக்கும் கலைஞர்” என்றும் பாராட்டினார். இளையராஜாவை தான் முதன்முதலில் சந்தித்தபோது அவரை ஒரு ‘சாமி’யைப் போலவே உணர்ந்ததாகவும், அன்று முதல் அவரை ‘சாமி’ என்றே அழைப்பதாகவும் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அரசியல் குறித்தும் பேசிய ரஜினிகாந்த், “முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள புதிய மற்றும் பழைய கட்சிகளுக்கு சவால் விடுத்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார். இந்த விழாவில் இளையராஜா, ரஜினிகாந்த் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் இருந்ததால், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது.