சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படம், உலகெங்கிலும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஸ்ருதிஹாசன், தனது கதாபாத்திரம் குறித்து சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அதிரடியான பதிலை அளித்துள்ளார்.
சமீகத்தில் ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர், “‘கூலி’ படத்தில் ப்ரீத்தி என்ற கதாபாத்திரம் ஒரு ‘துன்பத்தில் இருக்கும் பெண்’ (damsel in distress) ஆகச் சித்தரிக்கப்பட்டது உங்களுக்கு அநியாயமாகத் தெரியவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “அவள் உண்மையில் துன்பத்தில்தான் இருந்தாள். இது இயக்குநரின் பார்வை. இதில் நியாயம், அநியாயம் என்று எதுவுமில்லை” என்று உறுதியான பதிலைக் கொடுத்தார்.
‘கூலி’ படத்தில் ஸ்ருதிஹாசன், சத்தியராஜின் மகளாகப் நடித்திருந்தார். தனது தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்க ரஜினிகாந்தின் உதவியை நாடும் கதாபாத்திரமாக அது அமைந்திருந்தது. படத்தில் பலமுறை அவர் கடத்தப்பட்டு, பின்னர் காப்பாற்றப்படும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.
சினிமாவில் ஒரு கதாபாத்திரம் எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது என்பது இயக்குநரின் படைப்பு சுதந்திரத்தைச் சார்ந்தது என்றும், ஒரு நடிகர் அந்தக் கதாபாத்திரத்தின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு நடிப்பதுதான் முக்கியம் என்றும் ஸ்ருதிஹாசன் இந்த பதிலின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். இது ‘கூலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சமூக ஊடகங்களில் எழுந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஸ்ருதிஹாசன், இந்த படத்தை ஒத்துக்கொள்ள என்ன காரணம் என முன்பு அளித்த நேர்காணலில், “ரஜினிகாந்த் போன்ற ஒரு நடிகர், லோகேஷ் கனகராஜ் போன்ற ஒரு இயக்குனர் என இப்படி ஒரு திட்டம் என்னை அணுகும்போது அது ஏற்கனவே உற்சாகமாக இருக்கும். ஆனால், ப்ரீத்தி கதாபாத்திரம் மற்றும் அது கதைக்கு என்ன கொடுத்தது என்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்று கூறினார்.