நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியான அவர்களின் கூட்டணிப் படமான ‘மதராஸி’ பெற்ற ஓரளவுக்கு நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, இந்தச் செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் பெரிய இயக்குனர்களுடன் பணியாற்றுவது சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் கனவு. அந்த கனவை நனவாக்கும் வகையில், முருகதாஸின் இயக்கத்தில் வெளியான ‘மதராஸி’ திரைப்படம், கடந்த 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘துப்பாக்கி’ பட வில்லன் வித்யூத் ஜம்வால், ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவனாக நடித்து அசத்தியிருந்தார். இந்தப் படத்தில் வரும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தன.
‘மதராஸி’ பட வசூல்!
சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ‘அமரன்’ ₹300 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், எந்தவித பெரிய விளம்பரமும் இல்லாமல் வெளியான ‘மதராஸி’ அந்த சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், வெளியாகி 11 நாட்களில் இப்படம் ₹90 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ₹55 கோடி வசூலை எட்டியுள்ளதாகவும், சிலர் இது ₹100 கோடியைத் தாண்டிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ வசூலை இன்னும் வெளியிடவில்லை.
மீண்டும் இணையும் கூட்டணி?
இந்த சூழ்நிலையில்தான், ‘மதராஸி’ படப்பிடிப்பின் போது முருகதாஸ் சொன்ன ஒரு கதை சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்துப் போனதாகவும், இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய அதிக வாய்ப்பிருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக ‘டான்’ இயக்குனர் சிபி சக்கரவர்த்தி மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் படங்களில் நடிக்கவிருக்கிறார். இதனால், முருகதாஸ் உடனான அடுத்த படத்தின் வேலைகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.