திட்டமிட்ட இனப்படுகொலை – வெற்றிமாறன் கண்டனம்! சென்னையில் மெகா பேரணி!

திட்டமிட்ட இனப்படுகொலை – வெற்றிமாறன் கண்டனம்! சென்னையில் மெகா பேரணி!

இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சென்னையில் மெகா பேரணி!

அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பங்கேற்பு!

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல், கடந்த 2023 அக்டோபர் 07 அன்று, ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா மீது போரைத் தொடங்கியது. இந்தப் போரில் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 80 சதவீத காசா பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியான தாக்குதல்களால் உணவுத் தட்டுப்பாடு அதிகரித்து, உயிர் இழப்புகளும் உயர்ந்து வருகின்றன.


போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னை பேரணி

இந்தச் சூழ்நிலையில், இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், சென்னையில் பெரியார் அமைப்பு சார்பில் ஒரு மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி., மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், நடிகர் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், இயக்குனர் வெற்றிமாறன், அமீர் போன்ற திரைப் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.


திட்டமிட்ட இனப்படுகொலை – வெற்றிமாறன் கண்டனம்!

இந்த பேரணியில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், “எங்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, கொல்லப்படுகிறார்களோ, அங்கெல்லாம் ஆதரவாக நிற்பது மனிதர்களின் கடமை. பாலஸ்தீனத்தில் நடப்பது திட்டமிட்ட இனப்படுகொலை. பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலும் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று தெரிந்தும் அவர்கள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன. இது நீண்டகாலமாக நடந்து வருகிறது. இப்போது ஒரு தீர்மானமாகச் செயல்படுகிறார்கள்” என்று கூறினார்.

“காசா தற்போது பஞ்ச பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தை பசியால் சாவது தான் பஞ்சத்திற்கான அடையாளம். அவர்களுக்கு உதவத் தேவையான அனைத்துப் பொருட்களும் வெளியே தயாராக உள்ளன. ஆனால், காசா பகுதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த திட்டமிட்ட இனப்படுகொலையைக் கண்டிப்பது நம் அனைவரின் கடமை. மனிதர்களாக இருக்கும் நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மாற்றம் ஒரே இரவில் வராது, ஆனால் நமது எதிர்ப்பைப் பதிவு செய்து, அதைத் தொடர்ந்து வெளிப்படுத்துவது நம் கடமை” என்று அவர் மேலும் பேசினார்.