ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ளது. தணிக்கை வாரியச் சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில், இன்று காலை இந்தப் படத்தின் முழு நீளக் காட்சியும் இணையத்தில் கசிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே படத்தின் சில நிமிடக் காட்சிகள் கசிந்த நிலையில், தற்போது 3 மணி நேர முழுப் படமும் வெளியானது படக்குழுவினரை நிலைகுலையச் செய்துள்ளது.
படம் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, இயக்குநர் ஹெச்.வினோத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். “ஜன நாயகன் படத்தின் காட்சிகளையோ அல்லது முழுப் படத்தையோ யாரும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் பலரின் உழைப்பையும், பல ஆண்டுகால கனவையும் சுமந்து நிற்கிறது. சட்டவிரோதமாகப் படத்தைப் பார்ப்பது ஒரு படைப்பாளியின் உழைப்பைக் கொச்சைப்படுத்துவதாகும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்தப் படம் தியேட்டரில் வெளியாவதற்கான அனைத்து சட்டப் போராட்டங்களையும் தாங்கள் முன்னெடுத்து வருவதாகவும், அதற்குள் இத்தகைய கசிவுகள் ஏற்படுவது வேதனை அளிப்பதாகவும் வினோத் குறிப்பிட்டுள்ளார். திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ‘ஜன நாயகன்’ படத்தின் கதையும், அதன் அரசியல் பின்னணியும் மிகவும் முக்கியமானது என்பதால், இதனைத் திரையரங்குகளில் மட்டுமே பார்த்து ஆதரவளிக்க வேண்டும் என விஜய் ரசிகர்களும் இணையத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
சைபர் கிரைம் போலீஸார் தற்போது இந்தப் படம் வெளியான இணையதள முகவரிகளை முடக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் படத்தின் லிங்குகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. பல தடைகளைத் தாண்டி வெளியாகக் காத்திருக்கும் ஒரு பெரிய பட்ஜெட் படத்திற்கு இத்தகைய முட்டுக்கட்டைகள் விழுவது ஒட்டுமொத்த சினிமா துறையினரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.