Posted in

“வாழ்வதற்குப் போதிய ஊதியம் இல்லை”: நிறுவனத்திற்கு தீ வைத்த ஊழியர்; வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஒன்டாரியோவில் (Ontario) உள்ள கிம்பர்லி-கிளார்க் நிறுவனத்தின் 1.2 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட விநியோகக் கிடங்கு கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஷமெல் அப்துல்கரீம் (Chamel Abdulkarim) என்ற 29 வயது ஊழியரை ஒன்டாரியோ காவல்துறை கைது செய்துள்ளது. சுமார் 140-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தக் கிடங்கில் ஹக்கிஸ் (Huggies), கிளீனெக்ஸ் (Kleenex) போன்ற புகழ்பெற்ற பிராண்டுகளின் காகிதப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததால், தீ மிக வேகமாகப் பரவிக் கிடங்கை முழுமையாகச் சேதப்படுத்தியுள்ளது.

இந்தக் கைது நடவடிக்கைக்கு முக்கியக் காரணமாக ஒரு சமூக வலைதள வீடியோ அமைந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் ஷமெல் அப்துல்கரீம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு லைட்டரைப் பயன்படுத்தி காகிதக் கட்டுகளுக்கு அவர் தீ வைப்பதும், பின்னணியில் “நாங்கள் வாழ்வதற்குப் போதிய ஊதியத்தை நீங்கள் வழங்கியிருக்க வேண்டும்” (All you had to do was pay us enough to live) என்று ஆவேசமாகக் கத்துவதும் பதிவாகியுள்ளது. “இதோ உங்கள் சரக்குகள் அழிகின்றன” என்று அவர் கூறியபடி கிடங்கு முழுவதும் தீ வைத்துள்ளார். இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தீ விபத்தின் போது சுமார் 20 ஊழியர்கள் கிடங்கிற்குள் பணியில் இருந்தனர். நல்வாய்ப்பாக அவர்கள் அனைவரும் காயமின்றித் தப்பினர். ஆரம்பத்தில் ஷமெல் அப்துல்கரீம் காணாமல் போனதாகக் கருதப்பட்ட நிலையில், பின்னர் அவர் கிடங்கிற்கு அருகிலேயே சுற்றித் திரிந்தபோது காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டார். அவர் என்.எஃப்.ஐ (NFI Industries) என்ற மூன்றாம் தரப்பு விநியோக நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் அங்குப் பணியாற்றி வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அவர் எவ்விதப் பிணையுமின்றி (No Bail) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சுமார் 156 மில்லியன் டாலர் (ரூ.1,300 கோடிக்கும் மேல்) மதிப்பிலான இந்தக் கிடங்கு மற்றும் சரக்குகள் முழுமையாகச் சிதைந்துள்ளதால், அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் காகிதப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கிம்பர்லி-கிளார்க் நிறுவனத்தின் பங்குகள் 4.1 சதவீதம் சரிவைச் சந்தித்தன. குறைந்த ஊதியம் மற்றும் பணிச்சூழல் காரணமாக ஒரு ஊழியர் இவ்வளவு பெரிய நாசவேலையில் ஈடுபட்டது அமெரிக்கத் தொழிலாளர் அமைப்புகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.