அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக, உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, மே 31-ஆம் தேதி வரை ஒவ்வொரு வெளிநாட்டு விமான நிறுவனமும் ஒரு நாளைக்கு ஒரு விமானத்தை மட்டுமே துபாய்க்கு இயக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் முடிவால் துபாய்க்கு அதிகப்படியான சேவைகளை வழங்கி வரும் ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற இந்திய விமான நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்திய விமான நிறுவனங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் துபாய்க்கு ஆயிரக்கணக்கான விமானங்களை இயக்கத் திட்டமிட்டிருந்தன. குறிப்பாக, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணைந்து 750-க்கும் மேற்பட்ட விமானங்களையும், இண்டிகோ நிறுவனம் 481 விமானங்களையும் இயக்கத் திட்டமிட்டிருந்தன. ஆனால், புதிய கட்டுப்பாடுகளின்படி மாதத்திற்கு 30 அல்லது 31 விமானங்கள் மட்டுமே இயக்க முடியும் என்பதால், சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமான விமானச் சேவைகள் ரத்து செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்திய விமான நிறுவனங்களுக்குப் பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
இந்தக் கட்டுப்பாடுகள் துபாயைச் சேர்ந்த எமிரேட்ஸ் (Emirates) மற்றும் பிளை துபாய் (flydubai) ஆகிய நிறுவனங்களுக்குப் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், இது ஒருதலைப்பட்சமான முடிவு என இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIA) கண்டனம் தெரிவித்துள்ளது. துபாய் நிறுவனங்கள் தடையின்றிப் பல நூறு விமானங்களை இயக்கும்போது, இந்திய நிறுவனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது சமமற்ற போட்டிக்கு வழிவகுக்கும் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக, இந்தியாவில் உள்ள துபாய் விமான நிறுவனங்களின் சேவைகளையும் குறைக்க வேண்டும் என இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வு மற்றும் பாகிஸ்தான் வான்பரப்பைப் பயன்படுத்தத் தடை போன்ற காரணங்களால் இந்திய விமான நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. தற்போது துபாய் விடுத்துள்ள இந்தக் கட்டுப்பாட்டால் டெல்லி – துபாய் போன்ற முக்கிய வழித்தடங்களில் விமானக் கட்டணம் 18 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கோடை விடுமுறை காலத்தில் துபாய் செல்லத் திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான இந்தியப் பயணிகள் இந்தச் சேவைக் குறைப்பால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இந்திய வெளியுறவு அமைச்சகம் துபாய் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.