துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கைகுலுக்கல் சர்ச்சை காரணமாக, பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.
பாகிஸ்தானின் மிரட்டல்
இந்தியாவுடன் நடந்த ஆசிய கோப்பை போட்டியில், டாஸ் நிகழ்வின்போதும், போட்டி முடிந்த பின்னரும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் (Andy Pycroft) தான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டியது. இந்திய மற்றும் பாகிஸ்தான் அணி கேப்டன்கள் கை குலுக்க வேண்டாம் என்று பைகிராஃப்ட் தான் அறிவுறுத்தியதாகவும், இது விளையாட்டின் மாண்புக்கு எதிரானது என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் புகார் அளித்தது.
இந்தப் புகாரை ஐசிசி நிராகரித்ததால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான், பைகிராஃப்டை போட்டி நடுவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. மேலும், கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், ஐக்கிய அரபு அமீரகத்துடனான அடுத்த போட்டியைப் புறக்கணிப்போம் என்றும் மிரட்டியது. பாகிஸ்தானின் இந்த திடீர் முடிவால், ஐக்கிய அரபு அமீரக அணி வீரர்கள் மைதானத்திற்கு வந்து காத்திருந்த போதும், பாகிஸ்தான் அணி வீரர்கள் நீண்ட நேரமாக தாமதமாக வந்தனர்.
போட்டி தொடங்கியது ஏன்?
போட்டி நடக்குமா, நடக்காதா என்ற பதற்றமான சூழல் நிலவிய நிலையில், ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுக்கு இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஒரு மணி நேர தாமதத்திற்குப் பிறகு பாகிஸ்தான் அணி மைதானத்திற்கு வந்தது. இந்தப் போட்டியைக் புறக்கணித்தால், பல மில்லியன் டாலர் வருவாய் இழப்புடன், சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பையும் இழக்க நேரிடும் என்று ஐசிசி எச்சரித்ததே பாகிஸ்தான் பின்வாங்கியதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இறுதியில், போட்டி நடுவர் பைகிராஃப்ட் தலைமையில் டாஸ் போடப்பட்டு, போட்டி தொடங்கியது. இந்த பரபரப்பான சம்பவம், கிரிக்கெட் உலகிலும், ரசிகர்களிடமும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுடன் மீண்டும் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.