கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆழ்ந்த வேதனையுடன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்தத் துயரத்தால் தான் வார்த்தைகளால் சொல்ல முடியாத துயரத்தில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்குப் பிறகு தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் விஜய் வெளியிட்ட பதிவில், “கரூர் சம்பவம் கேட்டு இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன். தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடையப் பிரார்த்திக்கின்றேன்” என்றும் அவர் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
விஜய்யின் பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட இந்த நெரிசல், மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.