இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து கோரி லே பகுதியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக லடாக் மக்கள் மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட இரு முதியவர்களின் உடல்நிலை மோசமடைந்ததால், அவர்களை மருத்துவமனைக்கு மாற்றிய செய்தி, இளைஞர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, இளைஞர் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டு, லே நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை தீ வைத்து எரித்துள்ளனர். வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளையும், தடியடியையும் பயன்படுத்தியுள்ளனர். இந்த மோதலின் போது, உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது லடாக் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு வன்முறைச் சம்பவம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் லடாக் முழுவதும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.