Posted in

பழிவாங்கும் ஈரான்: சுலைமானி பாணியில் கமேனி வெளியிட்ட அதிரடிப் படம்

ஈரான் வான்வெளியில் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் எஃப்-15இ (F-15E) போர் விமானத்தின் சிதறிக் கிடக்கும் பாகங்களுக்கு அருகே, ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமினி 1980-ம் ஆண்டு இருப்பது போன்ற ஒரு பழைய புகைப்படத்தை ஈரான் அரசு ஊடகங்கள் தற்போது பகிர்ந்துள்ளன. 1980-ம் ஆண்டு அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்க வந்த அமெரிக்கப் படைகள் ‘தபாஸ்’ (Tabas) பாலைவனத்தில் சந்தித்த படுதோல்வியை இந்தப் புகைப்படம் நினைவுபடுத்துகிறது. “வரலாறு மீண்டும் திரும்புகிறது” என்ற வாசகத்துடன் பகிரப்பட்டுள்ள இந்தப் படம், அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

ஈரான் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாயமான அமெரிக்க வீரரை மீட்க வந்த ஒரு சி-130 (C-130) போக்குவரத்து விமானம் மற்றும் இரண்டு பிளாக் ஹாக் (Black Hawk) ஹெலிகாப்டர்களைத் தங்களது ‘மஜித்’ வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ளது. இருப்பினும், அமெரிக்கத் தரப்போ தங்களது விமானங்களை ஈரான் கைப்பற்றக் கூடாது என்பதற்காகத் தாங்களே வெடிவைத்துத் தகர்த்ததாகத் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தை 1980-ம் ஆண்டின் ‘ஆபரேஷன் ஈகிள் கிளா’ தோல்வியுடன் ஒப்பிட்டுள்ள ஈரானியப் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), “டிரம்ப் ஒரு சூதாட்டக்காரர்; தபாஸ் பாலைவன மணலில் ஒளிந்திருக்கும் கடவுள் இப்போதும் எங்களைக் காக்கிறார்” எனத் தெரிவித்துள்ளது.

இந்தத் தேடுதல் வேட்டையின் போது அமெரிக்காவின் அதிநவீன ஏ-10 (A-10) போர் விமானம் ஒன்றும் ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிகிறது. தென்மேற்கு ஈரானின் கடினமான மலைப்பகுதிகளில் மறைந்துள்ள அமெரிக்க வீரரைப் பிடிப்பதற்காக ஆயிரக்கணக்கான ஈரானியப் படைகள் மற்றும் ஆயுதமேந்திய பொதுமக்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம், அமெரிக்கச் சிறப்புப் படைகள் தங்களது வீரரை எப்படியாவது மீட்கப் போராடி வருகின்றன. இந்த மோதலால் இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தின் தெற்குப் பகுதி தற்போது ஒரு போர்க்களமாகவே மாறியுள்ளது.

அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள 48 மணி நேரக் கெடு முடிவடைய உள்ள நிலையில், ஈரானின் இந்த ஆக்ரோஷமான பிரச்சாரங்கள் போரின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் இராணுவ பலத்தை விடத் தங்களது வான் பாதுகாப்பு மற்றும் நிலப்பரப்பு மேலானது என்பதை உலகுக்குக் காட்ட ஈரான் முயன்று வருகிறது. அமெரிக்கா தனது விமானங்களை இழந்தது ஒரு மிகப்பெரிய “அவமானகரமான தோல்வி” என ஈரான் வர்ணித்துள்ள நிலையில், அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.