தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இரட்டையர்களில் ஒருவரான சபேஷ், உடல்நலக் குறைவால் காலமான துயரம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் மறைவுக்குப் பிறகு, இசையமைப்பாளர் சபேஷின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, அவரது நிறைவேறாத கடைசி ஆசையைச் சொல்லி கண்கலங்கினார்.
தேவா குடும்பத்தின் உழைப்பு!
தேவா மற்றும் அவரது குடும்பத்துடன் தனக்கிருந்த நீண்ட உறவைப் பற்றிப் பேசிய கே.எஸ். ரவிக்குமார், “தேவா, சபேஷ், முரளி எல்லோரும் நான் படித்த பள்ளியில் படித்தவர்கள். தேவா குடும்பத்தை இந்த அளவிற்கு உயர்த்தி வந்தவர். ஆரம்பத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம். பிறகு நல்ல நிலைக்கு வந்தபோது, தன்னுடைய தம்பிகளையும் உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்த்தார். அவருடைய இந்த வெற்றிக்குப் பின்னால், அவருடைய தம்பிகளின் உழைப்பும் அதிகம் உண்டு” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
சபேஷ்-முரளியின் அறிமுகம்!
கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய 17-க்கும் மேற்பட்ட படங்களில் தேவா பணியாற்றியுள்ளார். சபேஷ் மீது தனக்கிருந்த நன்மதிப்பின் காரணமாகவே, தேவாவின் அனுமதியோடு, சபேஷ் – முரளியை தனது ‘சமுத்திரம்’ படத்தின் மூலம் தனி இசையமைப்பாளர்களாக ரவிக்குமார் அறிமுகம் செய்து வைத்தார்.
“அவர் (தேவா) ரொம்பவும் சந்தோஷப்பட்டார். ‘நீங்க தாராளமா என்னுடைய தம்பிகளைத் தனி இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தலாம், அவங்க நல்ல நிலைமைக்கு வரணும்’ என்று பெருமையாகச் சொன்னார். சமுத்திரம் படத்திற்காக என் அலுவலகத்தில் சபேஷ் டியூன் போட்டபோது, அழகான ‘சின்ன தேவதை’ பாடல் டியூனுக்கு ‘தேவாவின் அன்பு தம்பிகள்’ என்று நான் பாடினதெல்லாம் மறக்க முடியாது” என்று ரவிக்குமார் நினைவுகூர்ந்தார்.
நிறைவேறாத கடைசி ஆசை!
“அவருடைய ஒரே ஆசை, இசையமைப்பாளர் சங்கக் கட்டடத்தை மிகப் பெரிதாகக் கட்ட வேண்டும் என்பதுதான். இப்போதுள்ள சங்கக் கட்டடங்களில் அதுதான் பெரிய கட்டிடம். ஆனால், அது பழமையாகிவிட்டது. அதனால், கங்கை அமரன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் போன்றோருடன் பேசி ஒரு நிகழ்ச்சி நடத்தி, அதன் மூலம் சங்கக் கட்டடத்தைப் பிரமாண்டமாகப் புதுப்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.”
“அதுதான் அவருடைய கடைசி ஆசையாய் இருந்தது. ஆனா, அந்தக் கடைசி ஆசை நிறைவேறாமலே போய்விட்டதுதான் எனக்குப் பெரிய வருத்தமாய் இருக்கு” என்று கண்கலங்கப் பேசினார். மேலும், சபேஷ் எப்போதும் தன்னுடன் இருப்பவர்கள் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று நினைக்கும் நல்ல மனிதர் என்றும் ரவிக்குமார் புகழ்ந்தார்.