Posted in

கார் பந்தயம் விருதுகளுக்காக அல்ல: அஜித்குமார் அதிரடி அறிக்கை!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமார் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், தனது சினிமா பயணம் மட்டுமின்றி, கார் பந்தயம் குறித்த பல முக்கிய தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

கார் பந்தயத்தில் தான் பங்கேற்பது விருதுகளை வெல்வதற்காகவோ, தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பதற்காகவோ அல்ல என்று அஜித் கூறியுள்ளார். கார் பந்தய உலகில் பல சவால்களை எதிர்கொண்டதாகவும், அதில் காயங்களும் தோல்விகளும் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில், “இந்த பயணம் விருதுகளுக்காகவோ அல்லது தலைப்பு செய்திகளுக்காகவோ அல்ல. ஒழுக்கம், துணிவு மற்றும் ஒரு குறிக்கோளுக்காக ஏற்படும் வலி ஆகியவற்றின் மூலம் என்னை எனக்கே நிரூபித்துக்கொள்ளவே பயணிக்கிறேன். வீரம் மிக்க நாட்டின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஐரோப்பிய கார் ரேஸில் ‘அஜித்குமார் மோட்டார் ரேசிங்’ என்ற பெயரில் மீண்டும் விளையாட்டுத் துறைக்குள் நுழைந்ததற்கான காரணம் குறித்து அஜித் விளக்கமளித்துள்ளார்.

“வயது வரம்பு, அச்சம், தடைகள் ஆகியவற்றைப் பார்த்து தங்கள் மீதே சந்தேகம் கொள்பவர்களுக்கு உத்வேகம் கொடுப்பதற்கும் இந்தத் துறைக்குள் மீண்டும் வந்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.

தனது வாழ்வில் மனைவி ஷாலினி மிகப்பெரிய பலமாக இருந்ததாகவும், தனது குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் இருவரும் வாழ்விற்கு அர்த்தம் கொடுத்தவர்கள் என்றும் அஜித் கூறியுள்ளார். தன்னுடைய நிறை குறைகள் அனைத்தையும் ஏற்று, 33 ஆண்டுகளாக அன்பு செலுத்தி கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். “வாழு வாழ விடு” (Live and let live) என்ற தனது தத்துவத்தையும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அஜித்தின் இந்த அறிக்கை அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.