தமிழ் சினிமாவின் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகர் அஜித்குமாருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தி, கமல்ஹாசன், சூர்யா, விஜய் எனப் பல முன்னணி நடிகர்களை வைத்து ‘லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸை’ (LCU) உருவாக்கி வரும் லோகேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ‘கூலி’ படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இவரது அடுத்தப் படம் ‘கைதி 2’ என பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அஜித் பற்றிய புதிய தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது ‘எக்ஸ்’ (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிக விரைவில் அஜித் குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளது. கிட்டத்தட்ட அனைத்தும் உறுதி செய்யப்பட்டுவிட்டது, அறிவிப்பு விரைவில் வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தகவல் அஜித் ரசிகர்களையும், லோகேஷ் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக அளித்த பேட்டி ஒன்றில், “அஜித்தை இயக்காமல் எனது திரை வாழ்க்கை முழுமை பெறாது. எனவே அவரை வைத்தும் கட்டாயம் இயக்குவேன்” என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித்குமார், தற்போது வரும் ஜனவரி மாதம் வரை கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். தனது அடுத்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஜனவரி மாதத்தில் இருந்து வெளியாகும் என்று சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
அஜித்தின் 64வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவார் என்றும், ‘ரோமியோ பிக்சர்ஸ்’ தயாரிக்கும் என்றும் முன்னதாக அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகின.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அஜித்தின் 63வது படமான ‘குட் பேட் அக்லி’ மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜின் அறிவிப்பால், அஜித்தின் அடுத்தப் படமே (AK 64) லோகேஷ் இயக்கத்தில்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
லோகேஷின் முந்தைய படமான ‘கைதி’யைத் தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனமே அஜித்தின் 64வது படத்தையும் தயாரித்தால், ‘கைதி 2’ திரைப்படம் தள்ளிப்போக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்ற பேச்சும் திரையுலகில் அடிபடுகிறது.