நடிகர் விஜய் அரசியலில் முழுமையாகக் கவனம் செலுத்துவதற்காக நடிக்கும் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ திரைப்படத்தைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளும், பிரச்சனைகளும், பஞ்சாயத்துகளும் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதனால், படம் தமிழ்நாட்டில் சரியான தேதியில் வெளியாகுமா என்பதே மிகப்பெரிய கேள்விக் குறியாக மாறியுள்ளது.
ஆரம்பத்தில், படம் எந்தப் பிரச்சினையுமின்றி வெளியாக வேண்டும் என்பதற்காகத்தான், கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் திரையரங்க உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுலிடம் விலை பேசியதாகத் தகவல்கள் கசிந்தன. இருப்பினும், தற்போது, ராகுல் இந்தப் படத்தின் தமிழக உரிமையை வாங்கவில்லை என்றும், அவருக்குப் பதிலாக வேறு சிலர் உரிமையை வாங்கப் போட்டி போடுவதாகவும் திடீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
‘ஜன நாயகன்’ பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தை ஒரு பெரிய நிறுவனமாக ஒரே நிறுவனம் வாங்க முன்வராமல், பல சிறிய விநியோகஸ்தர்கள் ஏரியா வாரியாகப் பிரித்துக் கேட்கிறார்களாம். இதனால், கேவிஎன் நிறுவனம் என்ன செய்வதென்றே தெரியாமல் குழப்பத்தில் உள்ளதாகவும், இந்த வியாபார சிக்கல் விரைவில் தீர்ந்தால் மட்டுமே படம் பஞ்சாயத்து இல்லாமல் வெளியாகும் என்றும் கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.
இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டி.வி. வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. விஜய் டி.வி. மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீப காலமாக சன் நெட்வொர்க் மற்றும் கலைஞர் டி.வி.களில் விஜய் பாடல்கள் கூட ஒளிபரப்பப்படுவதில்லை என்றும், உதயநிதிக்கு வேண்டப்பட்ட ராகுல் இந்தப் படத்தை வாங்காமல் பின்வாங்கியது இதனால்தான் என்றும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.
தி.மு.க.வை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்து அரசியல் களத்தில் முழங்கி வரும் நிலையில், அவரது கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ படத்திற்கு ஆளும் கட்சி தரப்பிலிருந்து பயங்கரமான அழுத்தம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, தற்போது ஏகப்பட்ட சிக்கல்கள் கிளம்பி உள்ளதாகக் கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் பொங்கல் பண்டிகைக்குப் போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ‘ஜன நாயகன்’ படத்தின் சாட்டிலைட் உரிமை, திரையரங்க உரிமை எனப் பல வியாபார ரீதியிலான ‘செக்மேட்கள்’ விஜய்க்கு எதிராக வைக்கப்பட்டு வருவதாகக் கூறுகின்றனர்.
விரைவில், இந்தப் படத்தின் வியாபாரச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தகவல் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.