சமீபத்தில் தமிழ்நாட்டையே உலுக்கிய கரூர் கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புச் சம்பவம் குறித்து நடிகர் அஜித் குமார் முதல் முறையாகப் பேசியுள்ளார். இது குறித்து வெளிப்படையாகப் பேசிய அவர், அந்தச் சம்பவத்திற்கு நடிகர் விஜய்யை மட்டும் குறை சொல்வது தவறு என்று கூறி, ஒட்டுமொத்த ரசிகர் சமூகத்தையும், திரையுலகையும் சிந்திக்கத் தூண்டியுள்ளார்.
கார் ரேஸில் பங்கேற்றுவிட்டு இந்தியா திரும்பிய நடிகர் அஜித் குமார் அளித்திருக்கும் ஒரு பேட்டியில், கரூர் சம்பவத்தை வைத்து தமிழ்நாட்டில் நடந்த விவாதங்கள் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
“கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பு அல்ல, நாம் எல்லோருமே பொறுப்பு,” என்று கூறி ரசிகர் மன்ற மோதல்களால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளுக்கு மொத்த சமூகமே காரணம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரசிகர்களின் ‘அளவுகடந்த எல்லையற்ற அன்பு’ மற்றும் கூட்டம் சேரும்போது ஏற்படும் ‘வெறித்தனம்’ போன்றவையே இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளுக்குக் காரணம் என்றும், இது முழு சினிமா துறையையும் மோசமாகக் காட்டுகிறது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், திரைத்துறையைச் சுற்றியுள்ள பரபரப்பை உருவாக்குவதில் ஊடகங்களுக்கும் பங்கு உண்டு என்று அஜித் குமார் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“இந்த மீடியாவும் படங்களின் முதல் நாள் முதல் ஷோவை ரசிகர்கள் அது செய்தார்கள் இது செய்தார்கள் எனப் பெரிதாக்கிக் காட்டுகிறது. இது ரசிகர்கள் மனதை மாற்றுகிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களுக்கு அவர் விடுத்த வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்: “அன்பு வையுங்கள் போதும்.”
ரசிகர்கள் என் மீது பொழியும் அன்புக்கு எப்போதும் நன்றிக் கடன் பட்டுள்ளேன் என்று கூறிய அஜித், அதே அளவுகடந்த அன்பு காரணமாகத்தான் தான் குடும்பத்துடன் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
“என் மகனைக்கூட நான் பள்ளிக்குக் கொண்டு சென்று விட முடியாத நிலை இருக்கிறது,” என்று அவர் கூறியது, திரைப் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்வில் ரசிகர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
நடிகர் அஜித்தின் இந்தப் பேட்டி, ரசிகர் கலாசாரம் மற்றும் திரைப் பிரபலங்களைச் சுற்றியுள்ள எல்லைகள் குறித்துத் தமிழ் திரையுலகில் ஒரு தீவிரமான விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.