தமிழ் சினிமாவின் தனித்துவமான கலைஞரும், இயக்குநருமான பார்த்திபன், சமீபத்தில் நடந்த நிகழ்வுகளில் சூப்பர் ஸ்டார்கள் அஜித் மற்றும் விஜய் குறித்து வெளிப்படையாகப் பேசிய கருத்துகள் தற்போது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அஜித்தின் அரசியல் பார்வைக்கும், கரூர் விபத்து குறித்து விஜய்யின் செயல்பாடுகளுக்கும் பார்த்திபன் நடுநிலைமை மற்றும் மரியாதை கொடுத்துப் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.
எஸ்ஆர்எம் பிரைம் மருத்துவமனை நிகழ்வில் பங்கேற்ற பார்த்திபனிடம், அஜித் சமீபத்தில் அளித்த பேட்டி குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, அரசியல் மற்றும் ஆட்சி குறித்து அஜித் பேசிய கருத்துக்குப் பார்த்திபன் முழு ஆதரவைத் தெரிவித்தார்:
“அவர் (அஜித்) எப்போதும் வேறு ஒரு உயரத்தில், வேறு ஒரு பார்வையில் இருக்கிறார். அஜித்தின் அந்தக் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. ‘ஒரு ஆட்சிக்கு ஐந்து வருடங்கள் கொடுத்துவிட்டால், அதை முழுமையாகச் செய்ய விட வேண்டும். ரெண்டரை வருடத்திலேயே விமர்சிப்பது சரியல்ல. அதில் உடன்பாடு இல்லை என்றால், மீண்டும் வரும் தேர்தலில் நாம் காட்டலாம்’ என்று அஜித் சொல்லியிருந்தது எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.”
முன்னதாக, தானும் இதே கருத்தைத்தான் கூறியிருந்ததாகவும் பார்த்திபன் ஒப்பிட்டுக் காட்டினார்.
கூட்ட நெரிசலால் விபத்துகள் நடப்பதைத் தவிர்க்க, ‘முதல் நாள் முதல் காட்சி’ கொண்டாட்டங்களை ஆதரிக்கக் கூடாது என்று அஜித் கூறியது குறித்தும் பார்த்திபன் விளக்கமளித்தார்.
“முதல் நாள் முதல் காட்சியை வைத்துத் தான் ஒரு நடிகரின் சம்பளமே முடிவு செய்யப்படுகிறது என்பது ஒருபுறம் நிஜம்தான். ஆனால், சீட்டைக் கிழிப்பது, அபிஷேகம் செய்வது போன்ற செயல்கள் இனி நிகழக் கூடாது என்றுதான் அஜித் பேசியிருக்கிறார். எல்லோருடையப் பார்வைக்கும் மரியாதை கொடுப்பதுபோல, அவருடையப் பார்வைக்கும் மரியாதை உண்டு” என்று பார்த்திபன் தெரிவித்தார்.
கரூர் சம்பவத்திற்குக் காரணம் நடிகர் விஜய் மட்டும் இல்லை என்று அஜித் பேசியது குறித்தும், பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்காதது குறித்தும் பார்த்திபன் தனது கருத்தைப் பதிவு செய்தார்.
“விஜய் அவர்கள் மட்டும் பொறுப்பேற்க முடியாது. நாம் எல்லோரும் பொறுப்பேற்க வேண்டும். மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர் (அஜித்) பதிலின் உள்நோக்கம்.”
“நான் ஆவேசமாகச் சொல்கிறோம்… ‘நானாக இருந்தால் நேரில் சென்றுச் சந்தித்து இருப்பேன்’ என்று. ஆனால், நடைமுறையில் அது முடியுமா? இதுதான் சரி, அதுதான் தவறு என்று கிடையாது. அவருக்கு (விஜய்) அது சரி என்று தோன்றுகிறது, அதைச் செய்கிறார். அந்தக் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவ்வளவுதான் வேண்டியது.”
மொத்தத்தில், தமிழ் சினிமாவின் இருபெரும் ஆளுமைகளின் செயல்பாடுகளையும் விவாதித்த பார்த்திபன், எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலையான, பக்குவமான ஒரு பார்வையை வெளிப்படுத்தியது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.