Posted in

கதை இல்லாமல் பான் இந்திய ஸ்டார்கள் எதற்கு? – கடுமையாக விமர்சித்த பிரபல இயக்குநர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, இப்படம் படுதோல்வியைச் சந்தித்தது. இந்த தோல்வி லோகேஷ் கனகராஜின் திரையுலக மார்க்கெட்டையே தலைகீழாகப் புரட்டிப் போட்டதாக திரைத்துறையில் பேசப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில், ‘திரைக்கதை மன்னர்’ என்று போற்றப்படும் இயக்குநர் பாக்யராஜ் பேட்டி ஒன்றில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, லோகேஷ் கனகராஜ் கார்த்தியுடன் ‘கைதி’, விஜய்யுடன் ‘மாஸ்டர்’, கமல்ஹாசனுடன் ‘விக்ரம்’ என தொடர்ச்சியாக மாபெரும் ஹிட் படங்களைக் கொடுத்து, இந்தியத் திரையுலகின் கவனத்தை ஈர்த்தார். எனவே, ரஜினியுடன் இணையும்போது, ‘கூலி’ மூலம் தரமான சம்பவத்தைக் கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். சிலர், இந்தப் படம்தான் ஆயிரம் கோடி ரூபாய் வசூலைத் தொடும் முதல் தமிழ்ப் படமாக இருக்கும் என்றும் ஆரூடம் கூறினர்.

ரசிகர்களின் உச்சக்கட்ட ஆவலுக்கு மத்தியில், தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, கன்னடத்திலிருந்து உபேந்திரா, ஹிந்தியிலிருந்து அமீர் கான் எனப் பல பான் இந்தியா நட்சத்திரங்களையும் லோகேஷ் படத்தில் களமிறக்கியிருந்தார். ஆனால், படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். “படத்தில் கதை என்று ஒன்றுமில்லை; பான் இந்தியா ஸ்டார்களை வைத்து லோகி படத்தை ஒப்பேத்தப் பார்த்திருக்கிறார்” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

‘கூலி’யின் தோல்வி, லோகேஷ் கனகராஜின் மார்க்கெட்டை ஆட்டம்காண வைத்திருக்கிறது. பலரும் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தை இவர் இயக்கவே கூடாது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

இலக்கணத்தை மீற வேண்டுமென்றால், முதலில் இலக்கணத்தைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதே பான் இந்தியா படங்களெல்லாம் வந்துவிட்டன, இப்போதுதான் அந்தப் பெயர் வந்திருக்கிறது, அவ்வளவுதான். அந்த ஊரிலிருந்து அவரை (நடிகரை) கூப்பிட்டால், அந்த ஊர்க்காரர்கள் படம் பார்த்துவிடுவார்கள் என்று நினைத்து ஸ்டார்களை இறக்குகிறார்கள்.

ஆனால், அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கான கதாபாத்திரங்களைச் சரியாகச் செய்யாமல் போனால் எப்படி? கதையே இல்லாமல் பான் இந்தியா படம் எடுத்தோ, கோடி கோடியாக பட்ஜெட் போட்டோ என்ன பிரயோஜனம்? அமீர் கான் கூட சமீபத்தில் ‘கூலி’ படத்தில் நடித்துத் தவறு செய்துவிட்டேன் என்று வருத்தப்பட்டார்தானே. இதை எப்படி வெளியில் சொல்வார்கள்? அவர் பெர்சனலாகக் கூட சொல்லியிருக்கலாம், அது லீக்காகியிருக்கலாம்,” என்றார்.