லிவர்பூல் நகரின் பரபரப்பான சாவாஸ் பார்க் (Chavasse Park) பகுதியில், கடந்த திங்கட்கிழமை மாலை 7:15 மணியளவில் கருப்பு நிற ஹூடட் (Hooded) ஜாக்கெட் அணிந்த இளைஞர் கும்பல் ஒன்று திடீரென ஒரு இளைஞரைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கத் தொடங்கியது. இந்த மோதலின் போது, கும்பலில் இருந்த சிலர் மறைத்து வைத்திருந்த நீண்ட அரிவாள்களை எடுத்து அந்த இளைஞரை வெட்ட முயன்றனர். அங்கிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இதைக் கண்டு அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர வைத்துள்ளது.
இந்தத் தாக்குதலில் 17 வயது இளைஞர் ஒருவர் கையில் வெட்டுக் காயங்களுடனும், தலையில் பலத்த வீக்கத்துடனும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மெர்சிசைடு (Merseyside) காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். “திரைப்படம் போல கண் முன்னே நடந்த இந்த வன்முறை எங்களை உறைய வைத்துவிட்டது” என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல் ஒரு திட்டமிட்ட ‘டார்கெட்டட்’ (Targeted) தாக்குதல் எனப் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 16, 17 மற்றும் 18 வயதுடைய மூன்று இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் பூட்டில் (Bootle) பகுதியில் உள்ள ஒரு முகவரியில் நடத்தப்பட்ட சோதனையில், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோடைக் காலம் தொடங்கும் வேளையில், நகரின் முக்கியப் பகுதிகளில் இத்தகைய வன்முறைகள் அதிகரிப்பது உள்ளூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. “வெயில் காலம் வந்தாலே இதுபோன்ற வன்முறைக் கும்பல்கள் வெளியே வந்துவிடுகின்றன” என அப்பகுதி மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, லிவர்பூல் நகரின் மையப்பகுதியில் காவல்துறையினருக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 13 வயது முதல் 35 வயது வரை உள்ள சந்தேகத்திற்கிடமான நபர்களைப் போலீஸார் வழிமறித்துச் சோதனை செய்யலாம் (Stop and Search) மற்றும் முகமூடிகளை அகற்ற உத்தரவிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 60-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் வன்முறை வீடியோக்களைப் பகிர வேண்டாம் என்றும், அது சட்டரீதியான விசாரணையைப் பாதிக்கும் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.