Posted in

தி.மு.க கொடியை தலைமைச் செயலகம் முன் எரித்த பொலிஸ்- மகளின் கால் வெட்டப்பட்டதாலா ?

சென்னை: தமிழகத்தின் அதிகார மையமான கோட்டை (தலைமைச் செயலகம்) முன்பே, ஆளும் கட்சியான திமுக-வின் கொடியை காவலர் ஒருவரே நடுரோட்டில் தீயிட்டு எரித்த சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய ஒரு காவலரே, துணிச்சலாக இத்தகைய செயலில் இறங்கியது, அங்கிருந்த பொதுமக்களையும் போலீசாரையும் ஒரு நிமிடம் நிலைகுலையச் செய்தது.

தலைமைச் செயலகத்தின் பிரதான நுழைவாயில் அருகே இன்று திடீரென வந்த அந்த காவலர், மறைத்து வைத்திருந்த திமுக கொடியை எடுத்து தீப்பற்ற வைத்தார். கொடி மளமளவென எரிவதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். “யாராவது தடுத்தால் கொளுத்திவிடுவேன்” என்ற ஆவேசத்துடன் அவர் செயல்பட்ட விதம், அங்கிருந்த சூழலையே ஒரு நிமிடம் போர்க்களமாக மாற்றியது. உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மற்ற போலீசார் விரைந்து வந்து, அவரிடமிருந்த கொடியைப் பறித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்தச் செயலில் ஈடுபட்டது கரூரைச் சேர்ந்த அருண் என்ற காவலர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் எதற்காக இத்தகைய விபரீத முடிவை எடுத்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு கட்சியின் அடையாளத்தை, அதுவும் ஆளும் கட்சியின் கொடியை தலைநகரின் மிக முக்கியமான இடத்தில் ஒரு அரசு ஊழியரே எரித்தது, தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அந்த காவலரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தனிப்பட்ட விரக்தியா அல்லது அரசியல் பின்னணி ஏதேனும் உண்டா என்ற கோணத்தில் போலீசார் துப்புத் துலக்கி வருகின்றனர். எது எப்படியோ, பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் தலைமைச் செயலகம் முன்பே நடந்த இந்தச் சம்பவம், கோட்டை வட்டாரத்தை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.