பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் கடந்த 21 மணி நேரமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை இன்று (ஏப்ரல் 12, 2026) எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்தது. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் முன்வைத்த ‘இறுதிச் சலுகையை’ ஈரான் நிராகரித்ததால், இப்பிராந்தியத்தில் நிலவும் போர்நிறுத்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானைத் தொடர்பு கொண்டுப் பேசினார். அப்போது, மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியிலான தீர்வை எட்ட ரஷ்யா முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும் புதின் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரான் ஏற்கனவே பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், ரஷ்யாவின் இந்தத் தலையீடு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி மீதான கட்டுப்பாடு மற்றும் ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் விவகாரத்தில் அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்படாததே பேச்சுவார்த்தை தோல்விக்குக் காரணமாக அமைந்தது. அமெரிக்கா தனது கோரிக்கைகளில் பிடிவாதமாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ள சூழலில், ரஷ்யா ஈரானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. “அமெரிக்கா கற்பனையான அச்சுறுத்தல்களைக் கூறி ஈரானின் இறையாண்மையைச் சீர்குலைக்க முயல்கிறது” என்று கிரெம்ளின் மாளிகை அமெரிக்காவைக் கடுமையாகச் சாடியுள்ளது.
இந்த மோதல் அதிகரித்தால் உலகளாவிய எரிசக்தி சந்தை மற்றும் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது. ஏற்கனவே உக்ரைன் போரில் பிஸியாக இருக்கும் புதின், தற்போது மத்திய கிழக்கிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறார். ஈரான் தனது புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் தலைமையில் வலுவான முடிவுகளை எடுத்து வரும் வேளையில், ரஷ்யா அவர்களுக்கு ஒரு ‘நம்பகமான கூட்டாளியாக’ (Reliable Partner) இருக்கும் எனப் புதின் உறுதியளித்துள்ளார். இது அமெரிக்காவின் ஆதிக்கத்திற்குச் சவால் விடும் ஒரு நகர்வாகவே பார்க்கப்படுகிறது.
தற்போது ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்கக் குழுவினர் வாஷிங்டன் திரும்பியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்க அமெரிக்கா தயாராகி வருவதாகத் தகவல்கள் கசியும் நிலையில், ரஷ்யாவின் இந்த மத்தியஸ்த முயற்சி போரைத் தடுக்குமா அல்லது வல்லரசுகளுக்கு இடையிலான மோதலாக உருவெடுக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும். சீனா மற்றும் வளைகுடா நாடுகளுடன் ஆலோசித்து அடுத்தகட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
⬅ Go Back