Posted in

10,000-க்கு மேல் ஆன்லைன் பரிமாற்றமா? இனி 1 மணிநேரம் காத்திருக்க வேண்டும்: ஆர்.பி.ஐ புதிய ரூல்!

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் அதிகரித்துள்ள அதே வேளையில், ஆன்லைன் மோசடிகளும் பல மடங்கு உயர்ந்துள்ளன. இதனைத் தடுக்க, ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு ரூ.10,000-க்கு மேல் அனுப்பப்படும் தொகையை உடனடியாக வரவு வைக்காமல், ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்க (Cooling-off period) ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. இந்த ஒரு மணி நேர இடைவெளியில், வாடிக்கையாளர் தவறுதலாகவோ அல்லது மோசடி நபர்களின் தூண்டுதலின் பெயரிலோ பணம் அனுப்பியிருந்தால், அந்தப் பரிவர்த்தனையை ரத்து செய்யும் வசதி (Cancel Option) வழங்கப்பட உள்ளது.

ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, நாட்டில் நடக்கும் மொத்த டிஜிட்டல் மோசடிகளில் ரூ.10,000-க்கு மேல் நடப்பவை எண்ணிக்கை அளவில் 45 சதவீதமாகவும், பண மதிப்பின் அடிப்படையில் 98.5 சதவீதமாகவும் உள்ளன. குறிப்பாக, உடனடிப் பணப் பரிமாற்ற முறையை (UPI/IMPS) மோசடிக்காரர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். பணம் அனுப்பப்பட்ட சில நிமிடங்களிலேயே அது பல கணக்குகளுக்கு மாற்றப்படுவதால், இழந்த பணத்தை மீட்பது கடினமாகிறது. இந்தப் புதிய ஒரு மணி நேரத் தாமதம், மோசடிப் பணத்தைச் சட்டவிரோதக் கணக்குகளுக்கு மாற்றுவதைத் தடுக்கும் ‘கோல்டன் ஹவர்’ (Golden Hour) பாதுகாப்பாகச் செயல்படும்.

இந்தத் தாமதமானது அனைத்துப் பரிமாற்றங்களுக்கும் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நீங்கள் அடிக்கடி பணம் அனுப்பும் நபர்களின் பட்டியலிலுள்ள (Whitelisted) பெயர்களுக்கு அல்லது மின்சாரக் கட்டணம், இன்சூரன்ஸ் போன்ற வணிக ரீதியான (Merchant Payments) பணப் பரிமாற்றங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. மேலும், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் ரூ.50,000-க்கு மேல் அனுப்பும்போது, அவர்களுக்குத் தெரிந்த ஒரு ‘நம்பகமான நபர்’ (Trusted Person) மூலம் கூடுதல் அங்கீகாரம் பெறவும் ஆர்.பி.ஐ பரிந்துரைத்துள்ளது. கணக்கைப் பாதுகாப்பாக முடக்க ‘கில் சுவிட்ச்’ (Kill Switch) வசதியும் இதில் அடங்கும்.

தற்போது இந்தப் பரிந்துரைகள் குறித்துப் பொதுமக்களின் கருத்துகளைப் பெற மே 8, 2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பெறப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில், இந்த விதிகள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகமான பணப் பரிமாற்றத்தை விடப் பாதுகாப்பான பணப் பரிமாற்றமே முக்கியம் என்ற நோக்கில் ரிசர்வ் வங்கி எடுத்துள்ள இந்த முயற்சி, சாமானிய மக்களின் கடின உழைப்பில் ஈட்டிய பணத்திற்குப் பெரும் பாதுகாப்பாக அமையும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.