Posted in

போர்க்கப்பல்கள் பற்றாக்குறையால் பிரிட்டன் கடற்படை திணறல்; ரஷ்யாவின் அச்சுறுத்தல் அதிகரிப்பு!

பிரிட்டனின் கடல் பரப்பில் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் உளவுக்கப்பல்களின் நடமாட்டம் கடந்த சில வாரங்களாகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, கடலுக்கடியில் உள்ள தகவல் தொடர்பு கேபிள்கள் மற்றும் எரிசக்தி குழாய்களைக் குறிவைத்து ரஷ்யா தனது ‘நிழல் கப்பற்படை’ (Shadow Fleet) மூலம் மறைமுக வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அச்சுறுத்தல்களைச் சமாளிக்கத் தேவையான எண்ணிக்கையிலான ரோந்து கப்பல்கள் (Escort Ships) தற்போது ராயல் நேவியிடம் இல்லை. இதனால், தனது பரம எதிரியாகக் கருதப்பட்ட பிரான்ஸ் நாட்டின் கடற்படை உதவியுடன், பிரிட்டன் தனது சொந்த கடல் எல்லையில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

ராயல் நேவியின் இந்த வீழ்ச்சிக்குத் திட்டமிடப்படாத பட்ஜெட் குறைப்பு மற்றும் புதிய கப்பல்கள் தயாரிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதமே முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. டைப்-23 ரகக் கப்பல்கள் பழமையானதாகி வரும் நிலையில், அவற்றுக்கு மாற்றாகத் தயாரிக்கப்பட்டு வரும் டைப்-26 மற்றும் டைப்-31 ரகப் போர்க்கப்பல்கள் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. தற்போது ராயல் நேவியிடம் வெறும் 13 போர்க்கப்பல்கள் (6 டிஸ்ட்ராயர்கள் மற்றும் 7 பிரிகேட்கள்) மட்டுமே உள்ளன. இவற்றிலும் பல கப்பல்கள் பராமரிப்புப் பணிகளுக்காகத் துறைமுகங்களில் முடங்கியுள்ளதால், அவசரக் காலங்களில் அவற்றை இயக்க முடியாத சூழல் நிலவுகிறது.

பிரிட்டன் தனது கவனத்தை மத்திய கிழக்கு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியங்களுக்குத் திருப்பியுள்ள நிலையில், அதன் சொந்தக் கடல் எல்லை பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். “ஒரு காலத்தில் உலகக் கடல்களை ஆண்ட ஒரு நாடு, இன்று தனது எல்லையைப் பாதுகாக்க அண்டை நாடுகளிடம் கையேந்தும் நிலையில் உள்ளது” எனச் சில பிரெஞ்சு கடற்படை அதிகாரிகள் விமர்சித்துள்ளனர். பிரான்ஸ் தற்போது ஐரோப்பாவின் முதன்மையான கடற்படை சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் வேளையில், பிரிட்டனின் இந்த பலவீனம் நேட்டோ (NATO) அமைப்பிற்குள்ளும் விவாதங்களை எழுப்பியுள்ளது.

ரஷ்ய அதிபர் புதின், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான தனது கடற்படை அச்சுறுத்தல்களைத் தீவிரப்படுத்தியுள்ளார். அண்மையில், நார்வே மற்றும் பிரிட்டன் கடல் எல்லையில் ரஷ்ய உளவு நீர்மூழ்கிக் கப்பல்களைத் தடுப்பதற்காக நடத்தப்பட்ட மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையின் போது, பிரிட்டன் தனது நட்பு நாடுகளின் உதவியை அதிகளவில் சார்ந்திருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. “எங்கள் ஆயுதக் கிடங்கு காலியாக உள்ளது, ஆனால் சவால்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன” என ராயல் நேவியின் முன்னாள் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். பிரிட்டன் அரசு தனது கடற்படைக்கான நிதியை உடனடியாக உயர்த்தாவிட்டால், அதன் கடல் எல்லைப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.