கொழும்பு, அக்குரகோடா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி நிசன்சலா ஆகியோரின் உடல்கள், இறுதிச் சடங்குகளுக்காக இன்று (பெப்ரவரி 15) அவர்களது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டன. முன்னதாக, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பொரளைப் பகுதியில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் உடல்கள் அவர்களது சொந்த ஊரான பிட்டிகல பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்தத் துயரச் சம்பவம் கடந்த பெப்ரவரி 13-ஆம் திகதி மாலை 5:00 மணியளவில் தலங்கம, அக்குரகோடா பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்கடியின் வாகன தரிப்பிடத்தில் நிகழ்ந்தது. இராணுவத் தலைமையகத்திற்கு மிக அருகாமையில் நடந்த இந்தத் தாக்குதலில், காரில் வந்த இனந்தெரியாத இருவர் கைத்துப்பாக்கி மற்றும் டி-56 ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சட்டத்தரணி மீதும் அவரது மனைவி மீதும் சரமாரியாகச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர். 44 வயதான புத்திக மல்லவாரச்சி மற்றும் 42 வயதான அவரது மனைவி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தாக்குதலுக்குப் பிறகு கொட்டாவ பகுதியில் விபத்துக்குள்ளான நிலையில் கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். இந்தக் கார் தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது என்பது ஆரம்பகட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு கொலையாளிகள் மற்றொரு வாகனத்தில் தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் பல விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
இராணுவத் தலைமையகத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் பட்டப்பகலில் நடந்த இந்தத் தாக்குதல் இலங்கை சட்டத்தரணிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட பகை அல்லது சட்ட ரீதியான வழக்குகளின் பின்னணி காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
