Posted in

கொழும்பு – பொரளையில் கோர விபத்து: போதையில் வாகன ஓட்டுநர் ! 

கொழும்பில் நேற்றுக்  காலை  பொரளை கனத்தை சந்திப் பகுதியில் நடந்த கோரமான விபத்துச் சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேக் செயலிழந்த ஒரு கிரேன் லொறி, போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த பல வாகனங்கள் மீது மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவர் பெண் பொலிஸ் அதிகாரிகள், ஐவர் ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அத்துருகிரியவைச் சேர்ந்த 62 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக கிரேனின் ஓட்டுநர் முன்னரே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கிரேன் வாகனத்தின் உரிமையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் இன்று அளுத்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் ஓட்டுநருக்கு கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து சிக்னலில் வாகனங்கள் நின்றிருந்தபோது, கிரேன் லொறி வேகமாக முன்னேறி வரிசையாக நின்ற வாகனங்கள் மீது மோதியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரேக் செயலிழந்ததுடன், ஓட்டுநர் போதையில் இருந்ததும் இந்த விபத்துக்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.