பொதுமக்களின் பாதுகாப்புக்காக இயங்கும் அரசாங்க நிறுவனங்களுக்குள்ளேயே பாதாள உலகக் குழுக்களின் ஆதிக்கம் ஊடுருவி விட்டது! இந்த அதிர்ச்சி உண்மையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவே ஒப்புக்கொண்டுள்ளார்.
அரசாங்கத்தின் முக்கியமான அங்கங்களான பொலிஸ், இராணுவம் போன்ற துறைகள் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கப் போராடி வரும் நிலையில், சிலரின் பிழையான நடவடிக்கைகளினால் ஒரு ‘கறுப்பு அரசாங்கம்’ உருவாகி வருவதாக ஜனாதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
“குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சில அதிகாரிகளே பாதாள உலகத் தலைவர்களுக்குச் சட்டவிரோதமாக கடவுச்சீட்டுகளைத் தயாரித்துக் கொடுத்துள்ளனர்!” என்று அவர் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறு அதிகாரபூர்வமான அரசு இயந்திரமே குற்றவாளிகளுக்கு உதவினால், இந்த நாட்டின் பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும் என்ன பயன் என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதாள உலகக் குழுக்களின் ஆதிக்கம், பொதுப் பாதுகாப்பிற்கான உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரை விரிவடைந்திருப்பது விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
கடந்த காலங்களில், சில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ‘வரியைச் சேகரிப்பது போல’, ஒவ்வொரு மாதமும் பாதாள உலகத் தலைவர்களின் வீடுகளுக்குச் சென்று பணம் பெற்றதை விசாரணைகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.
நாட்டு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், பாதாள உலகக் குழுக்களும் பின்னிப் பிணைந்துள்ள இந்த ஆழமான ஊடுருவல், நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஜனாதிபதியின் இந்தக் கடுமையான எச்சரிக்கை, இலங்கையின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் அரசியல் கட்டமைப்பையே உலுக்கியுள்ளது. பாதாள உலகத்தின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர ‘தீர்மானகரமான நடவடிக்கை’ எடுக்கப்படும் என்றும், இதற்குச் சிறிது காலம் எடுக்கும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.